How to apply education loan in tamil | கல்வி கடன் பெறுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது எப்படி ?

கல்விக் கடன் வாய்ப்பு:

உயர் கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப்பாகும்.

  1. உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்விக் கடன் பெற முயற்சிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
  2. பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி என எந்த உயர் கல்வியை பயிலவும் கல்விக் கடன் பெற முடியும். இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் கல்விக் கடன் வழங்கப்படும்.
  3. சில கல்வி நிறுவனங்கள், ஒரு சில வங்கிகளுடன் இணைந்து செயல்படும். அதுபோன்ற கல்வி நிலையங்களில் நீங்கள் உயர்கல்வி பயிலும் போது, அதனுடன் இணைந்து செயல்படும் வங்கியிலேயே உங்களுக்கு கல்விக் கடன் எளிதாக வழங்கப்படும். உள்நாட்டில் கல்வி பயில 10 லட்சம் ரூபாய் வரையும், வெளிநாட்டில் கல்வி பயில 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடன் வழங்கப்படும்.
  4. கல்விக் கடன் பெறும் மாணவர், வங்கி கேட்கும் சில ஆவணங்களை முறையாக சேகரித்து விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். விண்ணப்பங்களும், ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, மாணவர் மற்றும் அவரது குடும்பத்தாருடன் வங்கி அதிகாரி நேரடியாக கலந்துரையாடுவார். மாணவரின் தந்தை அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம், குடும்பச் சொத்து, மாணவர் சேர்ந்துள்ள பாடப்பிரிவின் தன்மை போன்றவை குறித்த தகவல்களை கேட்டறிவார்கள்.


வட்டி விகிதம்

மாணவர்கள் பெறும் கல்விக் கடன் தொகை ரூ.4 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் குறைந்த பட்ச வட்டி விகிதத்திலேயே வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்திற்கு மேல் கல்விக் கடன் தொகை இருந்தால், குறைந்தபட்ச வட்டித் தொகையுடன், 1 விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும். ஆனால், இந்த வட்டி விகிதக் கணக்கீடு வங்கிக்கு வங்கி மாறுபடும். ஒரு சில வங்கிகள், மாணவிகளுக்கும், ஒரு சில வங்கிகள் குறிப்பிட்ட கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் வட்டி சலுகைகளை வழங்குகின்றன.

கடன் ஜாமீன்

கல்விக் கடன் பெறுவதற்கு ஜாமீன் கையெழுத்து அல்லது ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பதும், மாணவர் கோரும் கடன் தொகையைப் பொறுத்து அமையும். சொத்து என்றால், வங்கிக் கணக்கில் பண வைப்பு அல்லது வீட்டு பத்திரம் போன்றவையாகும். இவற்றிற்கான ஆதாரங்களை கடன் பெறும் போது அளிக்க வேண்டும். ரூ.4 லட்சம் வரையான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பதில்லை. அதற்கு மேல் கடன் தொகை இருக்குமனால், சில நேரங்களில் மூன்றாம் நபரின் ஜாமீன் கையெழுத்து தேவைப்படும்.

கடனை திருப்பி அளித்தல்

கடன் தொகையை, படிக்கும் காலத்தில் திருப்பி செலுத்த தேவையில்லை. சில வங்கிகள், படிக்கும் காலத்தில் கடன் தொகைக்கு வட்டியை மட்டும் வசூலிக்கின்றன.  படித்து முடித்து வேலை கிடைத்ததும் அல்லது படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும் கடனை திருப்பி செலுத்த ஆரம்பிக்க வேண்டும். ஒராண்டிற்கு மேலும் கடனை திரும்ப செலுத்த தாமதிக்கக் கூடாது. அதுவும் 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும்.

கல்விக்கடன் பெறுவதற்கான ஆலோசனை

கல்விக் கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள்:

மாணவர்களுக்கு பணம் இல்லை என்பதால், கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில், முழு முனைப்புடன் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் கல்விக் கடன் திட்டம். நாட்டில் 25 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. இவற்றில், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., மெடிக்கல், இன்ஜி., உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளுக்கும் வங்கிகள் கல்வி கடன்களை வழங்குகின்றன. பொதுத் துறை வங்கிகளிடம், சிறப்பு படிப்புகளுக்கு மட்டும் கல்விக் கடனை பெற முடியாது.

வங்கிகளிடம் கல்விக் கடனை பெறும் முன், இருக்கும் தேவையான ஆவணங்களை முதலிலேயே தயார் செய்து வைத்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கு வேண்டும். உள்நாட்டில் படிக்கும் படிப்புகளுக்கு 10 லட்சமும், வெளிநாட்டில் உள்ள படிப்புகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. வங்கி கடன்களை திருப்பிச் செலுத்த அதிகபட்சமாக ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை கால அவகாசத்தை வங்கிகள் வழங்குகின்றன.

கல்விக் கடனை பெற விரும்பும் மாணவர்கள், வங்கி பணிகள் அதிகம் இருக்கும் நாட்களைத் தவிர்த்து அணுகினால், கல்விக் கடன் பெறுவதில் இருக்கும் நடைமுறைகள் மற்றும் வழங்க வேண்டிய ஆவணங்கள் என, அனைத்து விவரங்களையும் எளிதில் அறிந்து, கடனை பெற உதவியாக இருக்கும். கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை இல்லாமல் எளிதில் வெற்றி பெற முடியாது என்பதை மாணவர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

கடன் பெறும் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும்

வங்கி கடன் பெற்று படிக்கும் மாணவர்கள், மற்ற மாணவர்களை விட, நன்றாக படிக்க வேண்டும். மற்ற மாணவர்கள் நான்கு லட்சம் ரூபாய் படிப்புக்காக செலவிடுகிறார்கள் என்றால், வங்கி கடன் பெற்று பயிலும் மாணவர்கள், வட்டியுடன் சேர்ந்து 5.40 லட்சம் ரூபாய் செலவிடுகின்றனர்.

எந்தவொரு மாணவ, மாணவியரும் வறுமை காரணமாக பள்ளி படிப்பை நிறுத்தி விடக் கூடாது என்பதற்காக வங்கிக்கடன் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. வங்கிகளில் கல்வி கடன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், வழங்கப்பட்டும் வருகிறது.

வங்கி கடன் பெற, இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். கல்லூரியில் சேர்ந்ததற்கான, கல்லூரிகளில் பெறப்பட்ட உத்தரவு கடிதம் இருக்க வேண்டும். உங்கள் வீடு எந்த இடத்தில் இருக்கிறதோ, அதற்கு உட்பட்ட பொதுத்துறை வங்கி கிளைகளில் வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடங்களுக்கும் வங்கிக்கடன் வழங்கப்படும். நல்ல கல்லூரியில் சேர்ந்தால் மட்டும் போதாது; அங்கீகாரம் பெற்ற படிப்பா என்பதையும் பார்த்து சேர வேண்டும். உள்நாட்டில் படிக்க10 லட்சம் வரை, வெளிநாட்டில் படிக்க 20 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

இதில், நான்கு லட்சம் ரூபாய் வரை விண்ணப்பித்தால், முழு பணமும் வங்கியில் இருந்து வழங்கப்படும். நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் விண்ணப்பித்தால், ஐந்து சதவீத பணத்தை நீங்கள் செலவிட வேண்டும். விடுதி, வாகன கட்டணம் என படிப்பு சார்ந்த அனைத்து செலவுக்கும் வங்கியில் இருந்து பணம் வழங்கப்படும். ஆனால், அதற்கான ரசீதை கல்லூரியில் இருந்து பெற்று வர வேண்டும்.

உங்கள் படிப்புக்கு கம்ப்யூட்டர் அவசியம் என்றால், அவை வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும். முதலாண்டு வங்கி கடன் கிடைப்பதற்கு முன், கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்தி விட்டால், அந்தாண்டுக்கான பணம் மட்டும் கையில் வழங்கப்படும்.மற்ற ஆண்டுக்கான பணம், வங்கியில் இருந்து நேரடியாக கல்லூரிகளிடம் கல்வி கட்டணம் வழங்கப்படும். பெற்றோர் குடும்ப வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்தால், வட்டியில் சலுகை உண்டு. வங்கிக்கடன் பெற்று படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் கண்காணிக்கப்பட்டு வரும்; மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வங்கிகளில் இருக்கும்.

பட்டம் பெற்ற மாணவர்கள், வேலைக்கு சென்று ஆறு மாதத்துக்கு பின், கடனை செலுத்த துவங்க வேண்டும். படித்து முடித்து ஓராண்டு வரை வங்கிகள் மாணவர்களுக்கு பணம் செலுத்த அவகாசம் தரும். அதன் பின், மாணவர்கள் செலுத்தாமல் இருந்தால்,பெற்றோர் செலுத்த வேண்டும். வங்கி கடன் பெற்று படிக்கும் மாணவர்கள், கடனை முறையாக திருப்பிச் செலுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்து வரும் தலைமுறை மாணவர்களுக்கும் இத்திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்தும்

கல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்

  • மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றன. ஆனால் பொதுவாக எல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
  • அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ்
  • விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரது புகைப்படம்
  • மதிப்பெண் சான்றிதழ் அல்லது முந்தைய கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகல்கள்
  • மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தற்போதைய வருமானச் சான்றிதழ்
  • கல்விக் கடனுக்கு ஈடாக ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பின் அதன் அரசு மதிப்புச் சான்றிதழ்(ஏதேனும் இருந்தால்)
  • கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவரது அல்லது அவரது பெற்றோரது அல்லது ஜாமீன் கையெழுத்து போடும் நபரது கடந்த 6 மாதத்திற்கான வங்கிக் கணக்கு அறிக்கை
  • வெளிநாட்டு படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பின், பாஸ்போர்ட் அல்லது விசா, விமானக் கட்டணத்திற்கான ரசீது போன்றவற்றை மாணவர் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இவை அல்லாமல், வங்கிகள் தங்களுக்கு என்று சில ஆவணங்களை குறிப்பாக கேட்க வாய்ப்பிருக்கிறது. அவற்றையும் மாணவர்கள் அளிக்க வேண்டியது அவசியம்.

Post a Comment

2 Comments

  1. Hii..sir.I am Prabhu.. Epo BE 3rd year padikra.Enna ala fees pay panna mudiyala.. Soo remaining 2years kku mattum educational loan apply panna mudiyuma sir.... Pls reply sir,🙏🌝

    ReplyDelete
  2. Sir I am jothika ..na M.sc cs padikra 1st year...yenga v2la fees pay panna mudiyala Sir....so na apply pannalama....20,000 போதும் sir

    ReplyDelete