தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு கல்வி வழங்க தேவைக்கு ஏற்ப 574 கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க தமிழ்நாடு அரடு முடிவு செய்துள்ளது.
மேலும், இதற்கான புதிய இணையதளத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்த நிலையில், ஆகஸ்ட் 4 வரை தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கல்லூரிகள்
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டு சேர்க்கை நடைபெற்று முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்த காரணத்தினால், அனைவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வகையில், அரசு கல்லூரிகலீல் 20% இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டது. அதே போன்று, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15% இடங்களும், தனியார் கல்லூரிகளில் 10% இடங்களும் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் 15,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்லூரிகளில் கூடுதலாக இடங்கள் உருவாக்கபப்ட்டன. மேலும், இந்தாண்டு புதிதாக 15 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கல்லூரி உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு டிஆர்பி மூலம் அறிவிப்பு வெளியாகி, சுமார் 2 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும், அதற்கான தேர்வு நடத்தப்படவில்லை. மேலும், உதவி பேராசிரியர் தகுதித் தேர்வான செட் தேர்வு முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை. இதனால், கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களுக்கான ஆசிரியர் பற்றாகுறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்க முடிவு
இதனையடுத்து, தேவைக்கு ஏற்ப கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, 34 பாடப்பிரிவுகளில் 574 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், கணினி பயன்பாடு, உயிர் வேதியியல், உயிர் தொழில்நுட்பம், தாவரவியல், தொழில் நிர்வாகம், வேதியியல், வணிகம், கணினி அறிவியல், கார்ப்பரேட் செக்கரேட்ஷிப், பொருளாதாரம், ஆங்கிலம், புவியியல், வரலாறு, தகவல் தொடர்பியல், கடல் உயிரியல், கணிதம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், உளவியல், பொது நிர்வாகம், சமூகவியல், காட்சி தொடர்பியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 38 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கெளரவ விரிவுரையாளர்கள் தகுதிகள்
கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.07.2025 தேதியின்படி உச்சபட்ச வயது வரம்பு 57 வரை இருக்கலாம்.
கல்வித்தகுதியாக குறைந்தபட்சம் அந்தந்த பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுகலை படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிட பழங்குடியினர்/ பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / மாற்றுத்திறனாளி பிரிவினர் ஆகியோர் 50% மதிப்பெண் பெற்றிருத்தல் போதுமானது.
மேலும், விண்ணப்பதார்கள் Ph.D முடித்து முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது NET/SLET/SET ஏதேனும் ஒரு தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.
தொகுப்பூதியம்
தற்காலிகமாக கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் கல்வி ஆண்டில் மட்டும் 11 மாதங்களுக்கு தற்காலிகமாக பணி அமர்த்தப்படுவார்கள். பணியில் நியமிக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ளவர்கள் https://tngasa.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் ரூ.100 செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பதார்கள் ஒரு மண்டலத்திற்கு 3 மாவட்டங்களை வரை விருப்பப் பட்டியலில் தேர்வு செய்யலாம். விண்ணப்பதார்களின் புகைப்படம், கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள், SET/SLET/NET/ NET-JRF ஆகியவற்றுக்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
விண்ணப்பதார்களின் கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வித்தகுதிக்கு 85 மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பிஎச்.டி உடன் NET & JRF, NET, SET/ SLET தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 21 முதல் தொடங்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 4 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
விண்ணப்பம் தொடங்கிய நாள் 21.07.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 04.08.2025 மாலை 5 மணி வரை
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் நபர்களில் பணியிடங்களுக்கு ஏற்ப பாட வாரியாக ஆட்கள் கல்வித்தகுதி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான தகவல் இமெயில் மூலம் தெரிவிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் 30 ஏப்ரல் வரை பணி அமர்த்தப்படுவார்கள்.
0 Comments