சொந்த வீடு என்பது பெரும்பாலானோரின் கனவாக இருக்கும்.. பாடுபட்டு உழைத்து சம்பாதித்து, வீடு, நிலம் வாங்கும் போது, அதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள் குறித்தும், அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஏனெனில் அப்படி ஏதாவது வில்லங்கம் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று அலர்ட் செய்கிறார்கள் நிபுணர்கள்.
அந்தவகையில், நிலம் வாங்கும்போது சட்ட ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம்.. எப்போதுமே எந்த நிலத்தை வாங்குவதற்கு முன்பும், பதிவுத்துறையின் வழிகாட்டு மதிப்பு என்ன? என்பதை பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வமான வெப்சைட்டில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதில் ஓரளவு நிலத்தின் மதிப்பை அறியலாம். பிறகு நேரிலேயே சம்பந்தப்பட்ட மனையை சென்று பார்த்து, மனையின் விலை நிலவரம் என்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். பட்டா இடமா? புறம்போக்கு இடமா? ஏதேனும் கோயிலுக்குச் சொந்தமான இடமா? என்று கிராம நிர்வாக அலுவலருடன் தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும் அதற்கு பிறகே நிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
நிலத்தின் உரிமையாளர் யார்
பிறகு யாருடைய நிலத்தை வாங்க போகிறீர்களோ, அவர்களின் நில ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அதாவது, அந்த நிலத்தின் முந்தைய ஓனர் யார், தற்போதைய ஓனர் யார்? தாய்ப்பத்திரத்தில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா? அசல் ஆவணங்கள் அனைத்துமே உள்ளதா? அந்த வீட்டின் மீது இதற்கு முன்பு ஏதாவது கடன் வாங்கப்பட்டுள்ளதா? வீடு அடமானத்தில் உள்ளதா? என்பதை அறிய வேண்டும்.
ஆவண நகல்களை உரிமையாளரிடம் இருந்து வாங்கி, குறிப்பிட்ட அந்த இடம் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் வருகிறது என்பதை பார்த்து அங்குள்ள சமீபத்திய அசல் ஆவணத்துடன் ஒத்துப்போகிறதா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
மூலப்பத்திரம்
மூலப் பத்திரத்தை தொடர்ந்து சொத்தை விற்பவரின் பெயரில் அந்த நிலத்தின் தற்போதைய உரிமைக்கான பட்டா உள்ளதா என சரிபார்க்க வெண்டும். பத்திரத்தில் குறிப்பிடப்பட்டது போல நிலத்தின் அளவு பட்டா, சிட்டா போன்றவற்றில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
வாங்க போகும் நிலத்தின் நீளம், அகலம் சரியாக இருக்கிறதா? என்பதை அளந்து பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு சர்வேயர்களின் உதவியை நாடலாம்.. அவர்களை வைத்து, சம்பந்தப்பட்ட நிலத்தை அளந்து பார்த்துவிட்டால், தேவையில்லாத குழப்பம், சிக்கல் ஆரம்பத்திலேயே தவிர்க்கப்பட்டுவிடும்.
கரண்ட் கம்பி
தெரு அல்லது ரோட்டில் மின் இணைப்பு கம்பம் இருக்க வேண்டும், இல்லையெனில் அதற்கான செலவு நாம செய்யும்படி ஆகிவிடும்.. வீடு கட்ட வாங்கும் இடத்தின் மீது மின் கம்பிகள் சென்றால், அங்கு வீடு கட்ட முடியாது. இல்லாவிட்டால், மின்சார வாரியத்தை அணுகி, அதனை மாற்றிக்கொள்ள கோரிக்கை வைக்க வேண்டும். இதற்கு செலவும், அலைச்சலும் ஏற்படும்.
நீர் ஆதாரம், மண் ஆதாரம் அவசியம்
நிலம் உள்ள இடத்திற்கு அருகிலுள்ள குடிநீரின் தரத்தை பரிசோதித்து கொள்ள வேண்டும்.. ஒருவேளை உப்பு நீராக இருந்தால், சிக்கலாகிவிடும். உடல்நலமும் கெட்டுவிடும்.. எனவே, மனை வாங்க உள்ள இடத்தில் நீராதாரத்தைப் பார்க்க வேண்டும்.. அதேபோல, மழை பெறும் அளவு எனன? ஆறு, குளம் அருகில் உள்ளனவா? நிலத்தடி நீர்மட்டம் என்ன? அந்த பகுதியிலுள்ள மரங்களின் பசுமை அளவு என்ன? மர அடர்த்தி என்ன? மண் தன்மை என்ன? வண்டல் மண்ணா? மணல் கலந்த செம்மண்ணா? களிமண்ணா? பூதிமண்ணா? சுண்ணாம்பு மண்ணா என்று மண்ணின் தரத்தையும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, நீங்கள் வாங்கும் மனை எந்த பயன்பாட்டிற்கு அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது? அங்கீகாரம், ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேணடும். இதற்கு நில உரிமையாளரிடமிருந்து நிலத்தின் லே அவுட்டை வாங்கி பார்க்கலாம். அதேபோல, கிரயப் பத்திரம், பட்டா, வரி வகையறாக்கள் ரசீது, சிட்டா, அடங்கல் போன்ற வருவாய்த்துறை ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.
அரசு அங்கீகாரம்
ஒருவேளை CMDA, DTCP அங்கீகாரம் பெற்ற நிலம் என்றால், சில இடங்கள் பொது நல பயன்பாட்டிற்காக அரசுக்கு தானமாக தரப்பட்டிருக்கலாம்.. அப்படியிருந்தால், அந்த விவரமும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். அதேபோல, மனைப்பிரிவு சாலைகள், பூங்கா ஒதுக்கீட்டு இடங்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
காலி மனை வாங்கும்போது தாய்ப்பத்திரம், ஒரிஜினல் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.. பிறகு, நீங்கள் வாங்க முயலும், அந்த காலி மனைக்கு சிஎம்டிஏவின் Approval இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.. இதைத்தவிர உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உங்கள் ஊரிலுள்ள கிராம நிர்வாகியின் ஆலோசனையை பெற்று நிலம் வாங்குவது நல்லது.. அதேபோல, அதுவரை அந்த நிலத்துக்கு தவறாமல் நிலவரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய வேண்டும்.
உயில் பதிவு செய்யப்பட்டதா
உயில் மூலம் நிலம் கிடைத்து, அந்த நிலத்தை விற்க முனைந்தாலும், உயில் பதிவு செய்யப்பட்டதா? மெய்ப்பிக்கப்பட்டதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். குடும்ப சொத்தை வாங்க நேர்ந்தால், சம்பந்தப்பட்ட குடும்பத்தில் பெண் வாரிசின் கையெழுத்தும் அவசியம்.
அதேபோல, சம்பந்தப்பட்ட இடத்துக்கு பெறப்பட்டுள்ள வில்லங்க சான்றிதழை, உங்களது குடும்ப வழக்கறிஞரிடம் காண்பித்து ஆலோசனையை பெறலாம்.. அதேபோல, https://tnreginet.gov.in என்ற வெப்சைட்டிலும், வில்லங்க சான்றிதழை சரிபார்க்கலாம்.
வில்லங்கச் சான்றிதழ்
நீங்கள் வாங்கப்போகும் சொத்து, பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களையும் வில்லங்க சான்றிதழில் சரிபார்த்து கொள்ள வேண்டும். அதேபோல, வில்லங்க சான்றிதழ் பெற்று பெற்று அந்த இடத்தில் வேறு ஏதாவது சிக்கல்கள் உள்ளதா என பார்க்க வேண்டும். நிலத்தின் மீது வழக்கு அல்லது கடன் ஏதாவது உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
ஒருவேளை நிலம் பிடித்திருந்து அதனை வாங்க முடிவு செய்தால் அட்வான்ஸ் தொகை தர வேண்டியிருக்கும்.. அப்படி தருவதானால், அதையும் ஒரு பத்திரத்தில் எழுதி, கிரைய ஒப்பந்தம் ஏற்படுத்தி, சாட்சிகள் கையெழுத்துடன் அட்வான்ஸ் தொகையை வழங்கலாம். இறுதியாக, அரசு ஆணைகள், வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கும், பொறியாளர்களை தேர்வு செய்வது முக்கியமாகும்.
0 Comments