விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பல்வேறு கிராமங்களில் பகுதிநேர நியாய விலை கடை மற்றும் சமுதாயக்கூட கட்டிடம் உள்ளிட்ட சுமார் 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "பல்வேறு கிராமங்களில் நியாய விலை கடை இல்லாததால் பல கிலோமீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது என்று பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் பேசி தர்மாபுரம், உடுப்புக்குளம், கூவர்குளம், துலுக்கன்குளம் ஆகிய கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது.
நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் பெண்களை மையப்படுத்தி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக இன்றைக்கு நிறைய பேர் மனுக்கள் கொடுத்துள்ளனர். அதில் தகுதி வாய்ந்தவர்களுக்கு விண்ணப்ப படிவம் இன்னும் மூன்று மாத காலத்தில் மீண்டும் பெறப்பட்டு யார் யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
தகுதி உடைய அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் உத்தரவை முதல்வர் தந்துள்ளார், இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற புதிதாக விண்ணப்பங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும், இதுவரை இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறாதவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். மேலும் மகளிர் உரிமத்தொகைக்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments