கொரோனா தொற்று காலத்திற்குபின், வங்கிகளில் தங்கக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. அதிக கடன் தொகையைப் பெற பலர் தங்கத்தை அடமானம் வைத்து கடன் வாங்குகின்றனர். இன்னும் பலர் தங்கத்தை வங்கிகளில் அடமானம் வைத்து குறைந்த வட்டியில் கடன் பெறுகின்றனர். ஏனென்றால், கந்து வட்டிக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கவும், அவசர அவசியத் தேவைகளுக்கும் ஏழை எளிய மக்கள் உடனடி பண உதவி பெறுவதற்கு வங்கி நகைக்கடன்களையே பெரிதும் நம்பியுள்ளனர். குறைந்த வட்டியில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கடன் பெறும் வழியாக இந்த முறை இருந்து வந்தது. இதுமட்டுமல்லாமல், நினைத்த நேரத்தில் பணம் கிடைக்கும் என்றால் அது நகைக்கடனில் தான் கிடைக்கும். மற்ற கடன்களுக்கு பல விதிமுறைகள், ஆவணங்கள் தேவைப்படும் என்றாலும், நகைக்கடனுக்கு அதெல்லாம் தேவையில்லை.
இதுவரை நகைக்கடனுக்கு வட்டி மட்டுமே செலுத்தி வந்து, கால அவகாசம் ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்குள் நிறைவு பெற்றதும், ஒரே நாளில் அதனை மறு அடமானம் வைக்கும் வசதி இருந்தது. இதனால், நகைக்கடன் வாங்குவோருக்கு எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது, சாமானிய மக்களுக்கு பேரிடியாக ஆர்பிஐ புதிய விதிகளை போட்டுள்ளது. அதாவது, பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தித் திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கியின் புதிய விதியை விதித்துள்ளது.
உதாரணத்திற்கு ரூ.3 லட்சத்திற்கு நகைக்கடன் வாங்குகிறீர்கள் என்றால், அதற்கான வட்டியை மட்டும் செலுத்தி மறு அடகு வைத்துக் கொள்ளும் வசதி முன்பு இருந்தது. ஆனால், தற்போதைய புதிய விதிமுறைப்படி, அந்த ரூ.3 லட்சத்தையும் முழுமையாக செலுத்தி தான் மறு அடகு வைக்க முடியும். இருப்பினும், கடன் வழங்குவதில் உள்ள வெளிப்படைத் தன்மையையும், பிரச்சனைகளையும் களைவதற்காகவே இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது ஏழை எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
இருப்பினும், ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ள புதிய விதிமுறையின் படி நகைகளை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாகச் செலுத்தி மீட்டு, நகையைத் திருப்பிய மறுநாள் தான் மீண்டும் அதே நகைகளை அடகு வைத்துப் பணம்பெற முடியும். இதனால் கடன் வாங்கியவர்கள் முழுப் பணத்தையும் திரட்ட வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் மீண்டும் கந்து வட்டி வாங்கி, மீள முடியாத கடன் சுமையில் சிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
0 Comments