தமிழகத்தில் 54 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அடையாள அட்டைகள்! ID கார்டால் இத்தனை பயன்களா?

 சென்னை: மகளிர் சுய உதவிக் குழுவினரின் அடையாள அட்டைகளால் என்னென்ன பயன்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மொத்தம் 54 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு இந்த அட்டையானது வழங்கப்பட்டது.

                                                                                           


இந்த அடையாள அட்டை மூலம் அரசு பேருந்துகளில் 25 கிலோ வரை பொருட்களை கட்டணமின்றி இலவசமாக கொண்டு செல்லலாம். அதிலும் 100 கி.மீ. வரை செல்லலாம். கோ ஆப்டெக்ஸ் துணிகள் விலையில் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

கடனுதவி திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். சலுகை விலையில் ஆவின் நிறுவன பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். 

இணைய சேவை மையங்களில் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். அத்துடன் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் முக்கியமான அத்தாட்சியாக இந்த அட்டை விளங்கும். தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இடம் பெற்றுள்ள 54 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விவரங்களை சேகரிக்கும் பணிகள் ஒரு மாதத்திற்குள் முடித்து வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் ஊரகம், நகரப்பகுதிகளில் வசிக்கும் ஏழை, விளிம்பு நிலை மக்களின் வறுமையை ஒழிக்கவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செய்கிறது.

இதற்காக சுய உதவிக் குழுக்கள் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் இதுவரை 3.29 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்தக் குழுக்களில் 37 லட்சத்து 76 ஆயிரத்து 575 பெண்கள் உள்ளனர். இதே போல நகர பகுதிகளில் 15 லட்சத்து 98 ஆயிரத்து 144 மகளிரை கொண்டு 1 லட்சத்து 47 ஆயிரத்து 430 சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக 4.76 லட்சம் சுய உதவிக் குழுக்களில் சுமார் 54 லட்சம் மகளிர் உள்ளனர். மகளிர் குழுவினர் பெரும்பாலானோர் அடையாள அட்டை தொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 

அந்த வகையில் அவர்களுக்கு அடையாள அட்டையை அரசே வழங்கும் போது வங்கிகள், இதர அரசு நிறுவனங்களை எளிதாக தங்களால் அணுக முடியும். அத்துடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுய உதவிக் குழுக்கள் என்பதும் அடையாள அட்டைகள் வழியாக உறுதிப்படுத்தப்படும் என குழு உறுப்பினர்கள் கோருகிறார்கள்.

                                            
எனவே சுய உதவிக் குழுவினருக்கான அடையாள அட்டைகள் இரு கட்டங்களாக வழங்கப்படும். அரசால் உருவாக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு முதல் கட்டமாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்டப்ட குழுக்களின் உறுப்பினர்களுக்கு 2ஆவது கட்டமாகவும் வழங்கப்படும். 

அடையாள அட்டையை பெறும் சுய உதவிக் குழுவினருக்கு அரசின் பல்வேறு நல உதவிகளும் சென்றடையும். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே தொடங்கி வைத்துவிட்டார். இந்த அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக எடுக்க வேண்டும். அந்த அடையாள அட்டையில் சுய உதவிக் குழு உறுப்பினருக்கான குறியீடு, பெயர் , சுய உதவிக் குழு உருவான தேதி, பிறந்த தேதி, முதல்வரின் காப்பீட்டு திட்ட எண், ரத்த பிரிவு, தொடர்புக்கான முகவரி, தொலைபேசி எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். 

இந்த பணிகளை எல்லாம் ஏப்ரல் 14ஆம் தேதி நிறைவு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments