பி எஃப் கணக்கில் இருந்து ஏடிஎம், யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி மே மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் ஒரு தொகையாகும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்குமே பிஎஃப் கணக்குகள் கண்டிப்பாக இருக்கும். அதன்படி, 12 சதவீதம் வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். ஊழியர்கள் பணியில் இருக்கும்வரை இந்த பிஎஃப் கணக்கு தொடர்ந்து இருக்கும்.
இந்நிலையில் தான், பிஎஃப் கணக்கை எளிதாக கையாளும் வகையில் EPFO 3.0 என்ற தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுமிதா தவ்ரா, புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வங்கி சேவைக்கு இணையாக மிகப்பெரிய மாற்றத்துடன் பிஎஃப் அமைப்பு செயல்படும் என தெரிவித்தார். வங்கிக் கணக்கில் இருப்பை பார்ப்பது போல, யுபிஐ மூலமாக கணக்கில் உள்ள இருப்பை தெரிந்துகொள்ள முடியும் என்றும் தானியங்கி முறை மூலம் ரூ.1 லட்சம் வரை சில நிமிடங்களிலேயே எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேவையான வங்கிக் கணக்கிற்கும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். பிரத்யேக அட்டையை பயன்படுத்தி ஏடிஎம் கார்டு மூலமாக கூட பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.
0 Comments