ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசமாக ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் வகையிலான ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி 949 ரூபாய்க்கான புதிய ப்ரீபெய்ட் பிளானில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் செயலிக்கான சந்தா இலவசமாக கிடைக்கிறது.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு உட்பட்ட வியாகாம் 18 நிறுவனமும், டிஸ்னி +ஹாட்ஸ்டார் இந்தியா நிறுவனமும் இணைந்து கூட்டு நிறுவனங்களாக மாறின. இதனை அடுத்து தனித்தனியாக இருந்த ஜியோ சினிமா ஓடிடி செயலியும் ஹாட் ஸ்டார் ஓடிடி செயலியும் ஒருங்கிணைக்கப்பட்டு ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியை மக்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ரீபெய்டு பிளானின் கட்டணம் 949 ரூபாய் ஆகும். இதில் ரீசார்ஜ் செய்பவர்கள் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசமாக கிடைக்கிறது.
தனியாக ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் பிளானை மூன்று மாதங்களுக்கு வாங்க வேண்டும் என்றால் நாம் 149 ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இந்த பிரிபெய்ட் பிளானில் இலவசமாகவே கிடைக்கிறது. இத்துடன் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது.
இந்த ப்ரீபெய்டு பிளானுடன் கிடைக்கக்கூடிய ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை ஒரு சமயத்தில் ஒரு மொபைல் கருவியில் மட்டுமே அணுக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிளானில் வீடியோக்கள் மத்தியில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம் இல்லாமல் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் வீடியோக்களை பார்க்க வேண்டும் என விரும்புபவர்கள் இதற்கான பிரீமியம் திட்டமான மாதத்திற்கு 499 ரூபாய் திட்டத்திற்கு ப்ளான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் ஒரு ஆண்டுக்கு 1499 ரூபாய் பிளானை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே சமயத்தில் நான்கு கருவிகளில் எந்த விளம்பரமும் இல்லாமல் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் இருக்கும் வீடியோக்களை பார்க்கலாம்.
விளம்பரம் பார்க்க தயாராக இருக்கிறோம் என கூறும் பயனாளர்களுக்கு 299 ரூபாய்க்கு மூன்று மாதத்திற்கான பிளான் கிடைக்கிறது. ஆனால் இதில் வீடியோக்களுக்கு இடையே விளம்பரங்கள் ஒளிபரப்பாகும். இதே பிளான் ஓராண்டுக்கு 899 ரூபாய் என்ற அளவிலும் கிடைக்கிறது. ஏற்கனவே ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலிகளில் சந்தா வைத்திருப்பவர்கள் அவர்களுடைய தற்போதைய பிளான் காலாவதி ஆகும் வரை ஜியோ ஹாட்ஸ்டார் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments