சென்னை: போலியான ஆவணங்கள் மூலம் பதிவுகள் செய்வதை தவிர்க்கும் வகையில், மூலப்பத்திரம் இல்லாவிட்டால் பத்திரப்பதிவு செய்ய அரசு அனுமதிப்பது இல்லை.. இதனிடையே பத்திரம் தொலைந்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்து, எப்ஐஆர் நகல் பெற்று, அதன்பின்னரே பத்திர நகல் பெற்று, பத்திரப்பதிவு செய்கிறார்கள். மூலப்பத்திரம் இல்லாவிட்டாலும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த நகலை வைத்து பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த பப்பு என்ற வழக்கறிஞர், தனது மூதாதையர் சொத்தை தன் பெயரில் இருந்து தனது சகோதரர் பெயருக்கு மாற்றுவதற்கு மூலப்பத்திரம் இல்லை என பதிவு செய்ய ராசிபுரம் சார்பதிவாளரை அணுகியுள்ளார். ஆனால் ராசிபுரம் சார்பதிவாளர் மூலப்பத்திரம் இல்லாததால் ஏற்கனவே பெறப்பட்ட மூலப்பத்திரத்தின் நகலையும் ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்த மூலப்பத்திரத்தின் நகலை ஏற்க உத்தரவிட வேண்டும் என்று பப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியம், சக்திவேல் அமர்வு விசாரித்தது.
அப்போது அரசு தரப்பில், விதி 55 ஏ, போலியான ஆவணங்கள் மூலம் பதிவுகள் செய்வதை தவிர்க்கும் வகையில் பின்பற்றப்படுகிறது என்று வாதிடப்பட்டது. வழக்கறிஞர் பப்பு தரப்பில் வாதிடுகையில், தமிழக அரசின் பதிவுத்துறை விதி 55ஏ அடிப்படையில் மூல ஆவணங்கள் இல்லாததை காரணமாகக் காட்டி பதிவு செய்ய மறுக்கிறார்கள்.ஆனால், பதிவுத்துறையின் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நகல் இணைத்து இருந்தேன். மூல ஆவணங்கள் இல்லாததை காரணம் காட்டி உரிமை விடுவிப்பு செய்ய முடியாது என்று கூறுவது சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு பின்னர் அக்டோபரில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில் கூறுகையில், " வழக்கமாக ஒரு பத்திரப்பதிவு செய்ய வேண்டுமானால் பத்திரப்பதிவு சட்டப்படி மூலப்பத்திரம் வேண்டும். மூலப்பத்திரம் இல்லாவிட்டால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெற்ற ஜெராக்ஸ் நகல் இருக்க வேண்டும்.. அதுவும் இல்லாவிட்டால் போலீசில் பத்திரம் காணவில்லை என்று புகார் கொடுத்து, அதற்கு போலீசார் அளித்த சான்று இருக்க வேண்டும் என்று தான் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மூலப்பத்திரம், அல்லது மூலப்பத்திரம் கிடைக்கவில்லை என்ற போலீஸ் சான்று ஆகிய இரண்டும் இல்லாவிட்டாலும், பத்திரத்தின் நகலை அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டுப்பார்த்து பதிவு செய்ய வேண்டும், அனைத்து ஆவணங்களும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஏற்கனவே இருக்கும் என்பதால், அதனை ஒப்பிட்டுப் பார்த்து மனுதாரரின் சொத்து மாற்ற பத்திரத்தை ராசிபுரம் சார் பதிவாளர் பதிவு செய்ய வேண்டும் என உத்தவிடுகிறோம்" என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
அதாவது மூல ஆவணங்கள் வழங்கவில்லை என்ற காரணத்தால் பத்திர பதிவை மறுக்க முடியாது. மேலும் தமிழ்நாடு பதிவு விதி 55 ஏ சட்டப்பூர்வமற்றது என்றும், மூல ஆவணங்கள் இல்லாவிட்டாலும், நகல் ஆவணங்கள் இருந்தால் பதிவு செய்ய வேண்டும் என்றும் உரிமை விடுவிப்பு, பரிவர்த்தனை போன்ற சட்டபூர்வமான சொத்து பரிமாற்ற ஆவணங்களை தடுக்க முடியாது என்றும் மாநில அரசு சட்டங்களை பயன்படுத்தி சொத்து உரிமையை தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபேய் ஓகா, உஜல் புயான் ஆகியோர், "உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட எந்த அவசியமும் இல்லை" என்று தெரிவித்ததுடன், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இதன்மூலம், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இனி மூல ஆவணங்கள் இல்லாததை காரணமாக கூறி சொத்துகளை பதிவு செய்வதை சார்பதிவாளர்கள் மறுக்க இயலாது. நகல் ஆவணங்கள் இருந்தாலே பதிவு செய்ய வேண்டும். உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பத்திரப்பதிவு துறை அனுப்பி வைத்திருக்கிறது.
0 Comments