சென்னை: தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய ஐஆர்சிடிசி ஆப்பில் பலர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இணைய வேகம் மற்றும் ஸ்பீடு போன்ற பிரச்சனை காரணமாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் காலை 11 மணிக்கு தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்வது சவாலானதாக உள்ளது. இந்நிலையில் பொது மக்களின் வசதிக்காக ரயில் டிக்கெட், உணவு உள்பட அனைத்து ரெயில் சேவைகளும் ஒரே செயலியில் கிடைக்கும் வகையில் 'ஸ்வாரயில்' ஒன்றை ரயில்வே அறிமுகம் செய்திருக்கிறது. இதை எப்படி பயன்படுத்தலாம்.. எப்போது முதல் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயணிக்க விரும்புவது ரயிலில்தான். பிழைப்பு தேடி பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சர்வ சாதாரணமாக மக்கள் பயணிக்கும் இந்த காலக்கட்டத்தில் ரயில் போக்குவரத்து மிகவும் விருப்பமானதாக உள்ளது. குறைவான கட்டணம், விரைவான பயணம், கழிவறை, படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகள், அலுப்பு இல்லாத பயணம் போன்ற காரணங்களால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயில்களை பொறுத்தவரை என்ன தான் சேவைகள் எல்லாம் நன்றாக இருந்தாலும், அனைத்து சேவைகளும் தனித்தனியாக ஆப்பில் இருக்கின்றன.
தற்போதைய நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி. என்ற செயலி மூலம் ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து வருகிறார்கள். இதன் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இந்தியாவில் பல கோடி மக்களால் மக்கள் பயன்படுத்தும் ஆப்பாக ஐஆர்சிடிசி ஆப் இருக்கிறது. இதனை சுமார் 100 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். ஒரே ஆப்பில் எல்லாமே: அடுத்ததாக முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் மற்றும் மின்சார ரயில்களுக்கான டிக்கெட் எடுக்க யு.டி.எஸ். செயலி இருக்கிறது. அதே போல் ரயில்களில் செல்லும் போது உணவுகளை ஆர்டர் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி இ-கேட்டரிங் புட் என்ற ஆப் இருக்கிறது. இதேபோல், ரயில்களின் வருகை, புறப்பாடுகள் மற்றும் ரயில்கள் நிற்கும் நடைமேடைகளை கண்டறிய என்.டி.இ.எஸ் என்ற ஆப் இருக்கிறது. இந்த வசதிகள் எல்லாம் தனித்தனியாக ஆப்பில் இருப்பதால் அத்தனை ஆப்பையும் ஒரு மொபைலில் டவுன்லோடு செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது.
ஸ்வாரயில்: இந்நிலையில் தனித்தனியாக உள்ள இந்த ஆப்களின் சேவைகளை ஒன்றிணைத்து ஒரே ஒரு சூப்பர் செயலியாக அறிமுகம் செய்யப்படும் என்று ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மாதம் அறிவித்திருந்தார். அதன்படியே 'ஸ்வாரயில்' என்ற பெயரில் அறிமுகம் இந்திய ரயில்வே அமைச்சகத்தால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்வாரயில் ஆப்பை எப்படி பயன்படுத்துவது: ஸ்வாரயில் ஆப்பில் முன்பதிவு டிக்கெட், முன் பதிவில்லாத டிக்கெட், உணவு ஆர்டர், ரயில்களின் வருகை-புறப்பாடு, டிக்கெட்டின் பி.என்.ஆர். நிலை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் எளிதாக கிடைக்கும். ஏற்கனவே ஐ.ஆர்.சி.டி.சி. உள்ள நுழைவு விவரங்களை வைத்தே லாக் இன் செய்து பயன்படுத்தலாம். அதேநேரம் கணக்கு இல்லாதவர்கள் தங்களது செல்போன் எண், இ-மெயில் முகவரி கொடுத்து பதிவு செய்து பயன்படுத்தலாம். முதல் பக்கத்தில் ரயில்வே சேவைகள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதேபோல் டிக்கெட் விவரங்கள், கட்டணத்தை எளிதாக செலுத்தும் வாலட் வசதியும் இருக்கிறது. மேலும் பயணிகள் தங்களது குறைகளை எளிதாக தெரிவிக்கும் ரெயில் மடாட் வசதியும் ஸ்வாரயில் ஆப்பில் இடம் பெற்றுள்ளது.
ஸ்வாரயில் ஆப்பை டவுன்லோடு செய்ய முடியாது: ஸ்வாரயில் ஆப்பை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், அதனை நாம் இப்போது பதிவிறக்கம் செய்ய முடியாது. ஏனென்றால் சுமார் 1,000 பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு ரெயில்வே அதிகாரிகள் மட்டும் இப்போது பதிவிறக்கம் செய்து சோதனை செய்து வருகிறார்கள். இன்னும் சில தினங்களில், இந்த ஆப் முழுமையாக பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். தட்கல் எளிது: ஸ்வாரயில் ஆப்பில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது எளிது என்கிறார்கள் அதிகாரிகள். ஐஆர்சிடிசியில் உள்ளபடியே இதிலும் காலை 10 மணிக்கு ஏ.சி. பெட்டிகளுக்கும், காலை 11 மணிக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கும் டிக்கெட் புக் செய்ய முடியும். தற்போது உள்ள ஐஆர்சிடிசி ஆப்பை பொறுத்தவரையில் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது பல நேரங்களில் இணையதள சேவை மிகவும் மெதுவாக இருக்கும். இதனால் பயணிகள் புக்கிங் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தார்கள். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்வாரயில் ஆப்பில் தட்கல் டிக்கெட் மிக எளிதாகவும், விரைவாகவும் புக் செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
0 Comments