சென்னை: மூலப்பத்திரம் என்றால் என்ன? சொத்து ஆவணங்களை முன்கூட்டியே சரிபார்க்க சொல்வது ஏன் தெரியுமா? உங்கள் சொத்து பத்திரம் தொலைந்துவிட்டால், அதை திரும்ப பெறுவதற்கு பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
சொத்து உங்களுக்கு உரிமையானது என்பதை சொல்வதற்கான ஆதாரமும், இந்த சொத்து பத்திரங்கள்தான். எனவே, சொத்து ஆவணங்களில் பிழையில்லாமல் இருக்க வேண்டும்.. சொத்து வாங்கும்போதே ஆவணங்களைச் சரிபார்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால், வரும்காலத்தில் தேவையில்லாத சிக்கல்களை, நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும்.
மூலப்பத்திரம்: எனவே, நீங்கள் வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும், மூலப்பத்திரத்தில் அறிந்து கொள்ளலாம். தாய்ப்பத்திரத்தையே மூலப்பத்திரம் என்பார்கள். இதற்கு ஆங்கிலத்தில் parent document என்று பெயர். முதல் முதலாக குறிப்பிட்ட சொத்தை வாங்கியவர், அதை யாரிடமிருந்து வாங்கினார்? என்பதை எடுத்துரைப்பதே இந்த தாய்ப்பத்திரம்தான். நூறு வருடங்களுக்கு முன்பு, அந்த சொத்து யாரிடமிருந்தது? எத்தகைய பத்திரம்? எத்தகைய அரசு ஆவணம்? வாங்கும் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டுள்ளதா? போன்ற விவரங்கள் எல்லாமே இந்த மூலப்பத்திரத்தில் அடங்கியிருக்கும்.. வில்லங்க சான்றிதழ்: அதேபோல, சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், ஒப்பந்த தேதி, பதிவுசெய்யப்பட்ட தேதி, கிரயப் பத்திரம் (Sale Deed), கடன் பத்திரம் (Mortgage Deed), ஒப்பந்தப் பத்திரம் (Agreement) போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட வருடம் இப்படி எல்லாமே அதில் பதிவாகியிருக்கும்.. அதுமட்டுமல்ல, சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதி தந்திருந்தாலும், வில்லங்கச் சான்றிதழ் மூலம் அதனையும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்..
எப்போதும் அசல் ஆவணத்தை வைத்தே சொத்துக்களை வாங்க முடிவு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும், எந்த சொத்தையும், பிறரது நகல் ஆவணத்தை அடிப்படையாக வைத்து வாங்கிவிடக்கூடாது.. ஒருவேளை, அசல் ஆவணத்தை அவர்கள் தொலைத்துவிட்டதாக சொன்னாலும், உண்மையிலேயே அப்படி தொலைந்துவிட்டதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், சிலர் தங்களது அசல் ஆவணங்களை வங்கியில் வைத்துக் கடன் வாங்கியிருப்பார்கள். எனவே, அசல் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே சொத்துக்களை வாங்க முன்வரவேண்டும். ஆவணங்கள்: அதேபோல, சொத்தை விற்பவர் கொடுக்கும் ஆவணத்தையும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து நகல் ஆவணத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். குறிப்பாக, சர்வே எண், பத்திரப்பதிவு, கையொப்பம் இப்படி அனைத்துமே சரியாக இருக்க வேண்டும். அதேபோல, பத்திரங்களை எழுதியபிறகும் மூலப்பத்திரத்திலும், எழுதிய சொத்து ஆவணமும் சரியாக உள்ளதா? என்பதை படித்து பார்க்க வேண்டும். குறிப்பாக, சொத்து விவரம், சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், பிளாக் எண் போன்றவைகளில் பிழைகள் வரலாம்.
பிழைகள்: அப்படி பிழைகள் இருந்தால் உடனே சரிசெய்துவிட வேண்டும். ஏனென்றால், பிழைகளுடன் அந்த சொத்தினை வேறு யாருக்காவது விற்க முயன்றால் சிக்கலாகிவிடும். அல்லது இந்த பிழையை சுட்டிக்காட்டியே, உங்கள் சொத்தை அடிமாட்டு விலைக்கு பேரம் பேசலாம். பத்திரங்களில் திருத்தங்களை சரிசெய்ய "திருத்தல் பத்திரம்" உதவுகிறது. உங்களுக்கு விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி தந்த அதே நபரால் மட்டுமே, பிழையையும் திருத்த முடியும். இதற்கு 'பிழை திருத்தல் பத்திரம்' (Rectification Deed) வாங்கி சரிசெய்ய செய்ய வேண்டும். அதேபோல, உங்களுக்கு விற்பனை செய்திருந்த நபரும், பிழையை திருத்தி பத்திரம் பதிவு செய்துதர தயாராக இருக்க வேண்டும். முத்திரைக்கட்டணம்: ஆவணங்களில் எழுத்துப்பிழை என்றால், திருத்தம் பத்திரம் பதிவு செய்ய ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதும். ஆனால், ஆவணத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமானால், அலுவலகம் அதிக முத்திரைக் கடமையை கோரவேண்டும். இதற்கு அடையாளச் சான்று, முகவரி சான்று, புகைப்படங்கள் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.
0 Comments