ஆதார் புதுப்பிப்பு, பிழை திருத்தத்தில் தொடரும் குழப்பம்!

Follow Us

ஆதார் புதுப்பிப்பு, பிழை திருத்தத்தில் தொடரும் குழப்பம்!

 சிவகங்கை: ஆதார் புதுப்பிப்பு, பிழைத் திருத்தத்தில் தொடர்ந்து குழப்பம் நீடிப்பதால் பணம், கால விரயத்தோடு, மக்களும் அலைக்கழிப்பட்டு வருகின்றனர். இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு பெறுவது உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டது. தேசிய வங்கிகள், அஞ்சலகங்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் ஆதார் மையங்கள் இயங்குகின்றன.



சில இடங்களில் ஆதார் ஆணையத்திடம் அனுமதி பெற்ற தனியார் மையங்களும் இயங்குகின்றன. இங்கு புதிதாக ஆதார் எடுப்பது, புகைப்படம் மாற்றுவது, விரல் ரேகை-கருவிழி பதிவு மற்றும் முகவரி மாற்றம், பெயர், பிறந்த தேதி போன்ற திருத்தங்கள் உள்ளிட்டவைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.

மேலும் பெரியவர்கள் 10 ஆண்டுக ளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிக்க வேண்டும். 5 வயதுக்குள் ஆதார் எடுத்த குழந்தைகள், 5 வயதை கடந்ததும் புதுப்பிக்க வேண்டும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதவிர தற்போது கேந்திரிய வித்யாலயா போன்ற சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆதாரில் உள்ள பிழைகளை சரிசெய்ய மாணவர்களுக்கு கெடு விதித்துள்ளனர்.

இதனால் தினமும் ஆதார் மையங்களில் குழந்தைகளுடன் மக்கள் குவிந்து வருகின்றனர். ஆனால் பிழைத்திருத்தம் போன்றவைக்கு விண்ணப் பிக்கும்போது, அதில் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பித்தாலும் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றன. புதுப்பிப்போருக்கு பலருக்கு விரல்ரேகை சரியாக பதிவாவதில்லை. இதனால் பணம், கால விரயம் ஏற்படுவதோடு, ஆதார் மையங்களுக்கு மக்களும், குழந்தைகளும் அலைக்கழிக் கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: குழந்தைகளின் பெயரில் இனிஷியல் போன்ற பிழைத்திருத் தத்துக்கு, பிறப்பு சான்று அல்லது பள்ளி அடையாள அட்டை அல்லது மதிப்பெண் சான்று போன்றவை சமர்ப்பித்தாலும் நிராகரிக் கின்றனர். அதாவது சிலருக்கு பிறப்பு சான்று நிராகரிக்கப்படுகிறது. சிலருக்கு பள்ளி அடையாள அட்டை, மதிப்பெண் சான்று நிராகரிக்கப்படுகிறது. அதனால் எந்த ஆவணத்தை வைப்பது என்றே குழப்பம் நீடிக்கிறது.

அதேபோல் பெரியவர்களுக்கு வருமான வரித்துறை கொடுத்த பான்கார்டை ஆதாரமாக பெறுவதுகூட நிராகரிக்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து பலமுறை விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு முறை விண்ணப்பித்தால் ‘அப்டேட்’ ஆக ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

மாணவர்களை அடிக்கடி பள்ளியில் அனுமதி பெற்று அழைத்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் ஒவ்வொரு முறையும் கட்டணமும் செலுத்த வேண்டும். 1947 என்ற எண்ணில் தொடர்பு கொண்டாலும் முறையாக பதில் இல்லை. இதனால் ஆதார் விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் அல்லது மாவட்ட அளவிலாவது அதற்குரிய அதிகாரியை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஆதார் மைய ஊழியர் சிலர் கூறுகையில், ‘சரியான ஆவணத்தை சமர்ப்பித்தாலும் சில சமயங்களில் நிராகரிக்கின்றனர். இதனால் விண்ணப்பித்தோர் நாங்கள் சரியாக விண்ணப்பிக்கவில்லை என்று கூறி பிரச்சினை செய்கின்றனர். எங்களுக்கே என்ன செய்வதென்று புரியவில்லை’ என்றனர்.

Post a Comment

0 Comments