தமிழகம் முழுக்க விவசாய நிலங்கள் பதிவு பணி தீவிரம்! ரொம்ப முக்கியம்.. விவசாயிகள் உடனே இதை பண்ணுங்க

Follow Us

தமிழகம் முழுக்க விவசாய நிலங்கள் பதிவு பணி தீவிரம்! ரொம்ப முக்கியம்.. விவசாயிகள் உடனே இதை பண்ணுங்க

 சென்னை: மானியம், நலத்திட்ட உதவிகள் பெறுவதில் முறைகேட்டை தடுக்க தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாய நிலங்களை பதிவு செய்பவர்களுக்கு தனித்துவமான அடையாள எண்ணும் வழங்கப்படுகிறது.




மத்திய மாநில அரசுகள் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. அதுபோக வங்கிகளுக்கு கடனும் அளிக்கப்படுகிறது. ஆனால் விவசாயிகள் என்ற போர்வையில் இந்த நிதியை முறைகேடாக சிலர் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இத்தகைய குற்றச்சாட்டு மற்றும் புகார்களை களையும் விதமாக, விவசாயிகளுக்கு பிரத்யேகமாக தனி அடையாள எண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் உண்மையான விவசாயிகளுக்குக்குத்தான் செல்கிறதா என்பதை உறுதி செய்யும் விதமாக நில உடைமை பதிவு பணிகளை மேற்கொள்ள மத்திய வேளாண் அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்து இருந்தது.

அந்த அடிப்படையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் நிலங்களை பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆதார் எண் மூலமாக தங்களது நிலப்பட்டா எண்களை பதிவு செய்து புதிய தனித்துவ அடையாள எண்ணை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான பணி தமிழகம் முழுவதும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-

விவசாயிகளின் தரவுகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் பதிவு செய்ய விவசாயிகள் நிலத்தின் பட்டா, ஆதார் எண் போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் விஏஓ ஆபிஸ், ஊராட்சி ஆபிஸ் ஆகியவற்றில் இதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இது மட்டும் இன்றி வட்டார உதவி வேளாண்மை அலுவலர் அலுவலகங்களிலும் இந்த பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

விவசாயிகள் தங்களது பட்டா, ஆதார் எண் அடிப்படையில் பதிவு செய்ததும் சம்பந்தப்பட்ட விவசாயியின் செல்போனுக்கு தனித்துவ அடையாள எண் அனுப்பப்படும். அடையாள எண் வழங்கிய பின்னர், விவசாய கடன், மானியம், நலத்திட்டம் போன்ற விவசாயிகளுக்கான அனைத்து பயன்களும் தனித்துவ அடையாள எண் அடிப்படையில் வழங்கப்படும். கூட்டுப்பட்டா வைத்திருக்கும் விவசாயிகளும் இந்த பதிவை செய்யலாம். பட்டா இல்லையென்றால் பதிவு செய்ய முடியாது. சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்யாத விவசாயிகளை கண்டறிந்து அடுத்த கட்டமாக அவர்களது நில விவரங்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்" என்றனர்.


Post a Comment

0 Comments