தற்போது பலரும் போஸ்ட் ஆஃபீஸ் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இங்கு பல்வேறு காலகட்டங்களில் சேமிப்பு திட்டங்கள் வழங்கப்படுகிறது. சாமானியர்களுக்கு உதவும் வகையில் மாதம் மாதம் சேமிக்க கூடிய திட்டங்களும் போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படுகிறது. அனைவராலும் மொத்தமாக அதிக அளவிலான தொகையை சேமிக்க முடியாது. அப்படி இருப்பவர்கள் போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இன்றைய பதிவில் அனைவருக்கும் உதவும் வகையில் தினமும் 50 ரூபாய் சேமித்து போஸ்ட் ஆபீஸ்களில் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டங்களாகும் இதன் காரணமாக உங்களுடைய முதலீடு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். மக்கள் அதிக அளவில் இந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கான காரணமே இதுதான். போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் காலப்போக்கில் பெரிய தொகையை பெற்றுக் கொள்ள முடியும்.
மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்களுக்காக போஸ்ட் ஆபிஸ்களில் RD என்று சொல்லப்படுகிற ரெக்கரிங் டெபாசிட் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உங்களுடைய வருமானம் காலப்போக்கில் அதிகரிக்கும். தினமும் 50 ரூபாய் சேமித்தால் எவ்வளவு லாபம்?: தினமும் 50 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்துக் கொண்டே வந்தால் மாதத்திற்கு 1500 ரூபாய். இந்த 1500 ரூபாயை போஸ்ட் ஆபீஸ் RD கணக்கில் தொடர்ந்து செலுத்தி வந்தால், உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய முதலீடு அதிகமாகும். பெரிய தொகையாக சேமிக்கும் போது உங்களுடைய பிற விஷயங்களில் அவை தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சிறு தொகையாக சேமிப்பது நீங்கள் சேமிப்பதே தெரியாமல் உங்களுடைய முதலீட்டை அதிகரிக்க உதவும். RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஆக 5 ஆண்டுகளுக்கு மாதம் மாதம் 1500 ரூபாயை சேமித்து வந்தால், 5 ஆண்டுகளில் 90,000 ரூபாயை டெபாசிட் செய்திருப்பீர்கள். அதற்கு வட்டி வருமானமாக 17,050 ரூபாய் கிடைக்கும். எனவே வட்டியையும், முதலீட்டையும் சேர்த்து 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
தினமும் 100 ரூபாய் சேமித்தால் எவ்வளவு லாபம்?: அதுவே தினமும் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் மாதத்திற்கு 3,000 ரூபாயை சேமித்திருப்பீர்கள். இந்தத் தொகையை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்து வர மொத்தமாக 1,80,000 ரூபாயை டெபாசிட் செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி வருமானமாக 32,972 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் 5 வருடங்கள் கழித்து அசலும் வட்டியும் சேர்த்து 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். தற்போது RD திட்டத்திற்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 12 தவணைகளை செலுத்திய பிறகு டெபாசிட் செய்த தொகையில் 50 சதவீதம் வரை கடனாக பெறலாம். அதோடு 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பணத்தை செலுத்தி விட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கும் RD திட்டத்தை நீட்டிக்கும் வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் கணக்கை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மூடலாம். ஆனாலும் வட்டி விகிதம் சேமிப்பு கணக்கின்படி தான் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். RD திட்டத்தில் முதலீடு செய்வது முதலீடு பிரிவு 80-சியின் கீழ் வரி விலக்கை பெற முடியும்.
0 Comments