சொத்து வரி கட்டாத 2 லட்சம் பேர்.. கியூஆர் கோடுடன் வரப்போகும் நோட்டீஸ்.. சென்னை மாநகராட்சி முடிவு!

Follow Us

சொத்து வரி கட்டாத 2 லட்சம் பேர்.. கியூஆர் கோடுடன் வரப்போகும் நோட்டீஸ்.. சென்னை மாநகராட்சி முடிவு!

 சென்னை: சென்னையில் முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸை அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதன்படி சுமார் 2 லட்சம் பேருக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி எளிதாக சொத்து வரியை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சென்னையில் சொந்தமாக வீடு, நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோரிடம் இருந்து மாநகராட்சி சார்பாக சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி வருவாய் மூலமாக தான் மாநகராட்சி சார்பாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சுகாதார பணிகள், தெரு விளக்குகள், பூங்காக்களை பராமரித்தல், திடக்கழிவு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வரை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான வரியையும், பின்னர் அக்டோபர் 30ஆம் தேதிக்கும் அடுத்த அரையாண்டுக்கான வரியையும் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் சொத்து வரியை கட்டினால், ரூ.5 ஆயிரம் வரை வரியில் தள்ளுபடி அளிக்கப்படும். தற்போது நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரி வசூல் பணிகள் சென்னை மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சொத்து வரி கட்டாமல் இருப்பவர்களால் சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் திண்டாடி வருகிறது. இதற்காக கடந்த மாதம் முதலே வார்டு வாரியாக ஆய்வு நடத்தி கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது.

சில பகுதிகளில் சீல் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.5 ஆயிரத்திற்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்திருப்பவர்களுக்கு இந்த வகையில் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. அவர்கள் இந்த கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி எளிதாக சொத்து வரியை செலுத்த முடியும். மேலும் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் இருக்கும் சுமார் 2 லட்சம் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது


Post a Comment

0 Comments