தமிழ் நாடு அரசால் சமுக நலத்திட்ட மற்றும் ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்கள் கல்வி மேம்பட மற்றும் திருமணத்திற்கு உதவி அளிப்பதற்காக உள்ள திட்டம் தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு 'திருமண உதவி திட்டம்'ஆகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து உதவி பெற பல விதிமுறைகள் உள்ளன. அவற்றைப் பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
உதவித் தொகை எவ்வளவு அளிக்கப்படுகின்றது?
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வரை படித்து இருக்கும் பெண்களுக்கு 25,000 ரூபாய் முதல் வரை வழங்கப்படுகின்றது. இதுவே டிப்லோமா அல்லது பட்டம் பெற்றவர்களாக இருந்தால் 50,000 ரூபாய் வரை பெறலாம்.
தகுதி வரம்பு
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப் படிப்பு, வருமானம், வயது பொன்ற தகுதி வரம்புகள் உள்ளன. அவை பற்றி முதலில் தெரிந்துகொள்ளலாம்.
படிப்பு
மணப்பெண் குறைந்தது 10 வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும். இதுவே பழங்குடியின பெண் என்றால் 5 வகுப்பு படித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
வருவாய்:
குடும்ப வருவாய் ஆண்டுக்கு 72,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
வயது:
மணப்பெண்ணின் வயது 18 வயதை நிறைவு செய்து இருக்க வேண்டும்
விண்ணப்பம் செய்வதற்கான கால அளவு?
திருமணம் ஆவதற்கு 45 நாட்களுக்கு முன்பே விண்ணப்பம் செய்து இருக்க வேண்டும். திருமணத்திற்கு 1 நாள் பிறகு விண்ணப்பித்தாலும் பணம் கிடைக்காது.
பிற விதிகள் :
ஒரு வீட்டில் இருந்து ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த உதவித் தொகையினைப் பெற முடியும்.
விண்ணப்பிக்க யாரை அணுக வேண்டும்?
சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, ஈரோடு & திருப்பூர் போன்ற நகரங்களில் உள்ளவர்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தை அணுக வேண்டும். நகராட்சிகளில் உள்ளவர்கள் நகராட்சி ஆணையர் அலுவலகத்தினை அணுக வேண்டும். கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்கள் பஞ்சாயத்து யூனியன் ஆணையர் அலுவலகத்தினை அணுக வேண்டும்.
எத்தனை நாட்கள் ஆகும்?
ஒருவர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்த பிறகு செயலாக்கப் பணிகளைச் செய்யக் குறைந்தது 15 நாட்கள் வரை தேவைப்படும்.
தேவையான ஆவணங்கள்
10 ஆம் வகுப்பு அல்லது டிகிரி / டிப்ளமோ படிவம்
டிசி நகல்
சமூகச் சான்றிதழின் பிரதி
வருமான சான்றிதழின் பிரதி
ரேஷன் அட்டை புகைப்பட நகல்
திருமண அழைப்பிதழ்
பாஸ்போர்ட் அளவு விண்ணப்பதாரர் மற்றும் பெற்றோரின் புகைப்படம்
மேலும் விவரங்கள்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு‘திருமண உதவி திட்டம்' குறித்து மேலும் விவரங்கள் வேண்டும் என்றால் மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும்.
1 Comments
Tell us link apply through online
ReplyDelete