TNPSC annual planner 2026: முதல் முறையாக டி.என்.பி.எஸ்.சி மூலமாக பல்கலை. ஊழியர் தேர்வு; காலிப் பணியிடம் உயரும்; முழு விவரம் எப்போது?

Follow Us

TNPSC annual planner 2026: முதல் முறையாக டி.என்.பி.எஸ்.சி மூலமாக பல்கலை. ஊழியர் தேர்வு; காலிப் பணியிடம் உயரும்; முழு விவரம் எப்போது?

 தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த தேர்வு இனி பல்கலைகழகங்கில் காலியாக உள்ள பணியிடங்களுக்கும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், 2026-ம் ஆண்டுக்கான குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட அறிவிப்புகளுடன் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் வேலை வாய்ப்பை நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதில், சமீபத்தில், மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சிப்காட், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.


அந்த வகையில் தற்போது, மாநில அரசு பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய தமிழக அரசு சட்டம் இயற்றிய நிலையில், இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள 22 அரசு பல்கலைக்கழங்களில் ஆசிரியர் அல்லாத இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவி பதிவாளர் போன்ற பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட குருப்-4 தேர்வின் முடிவு மற்றும் தரவரிசை பட்டியல் அக்டோபர் 22-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் கடந்த 29-ம் தேதி வெளியானது. முதலில் முதலில் 3,935 ஆக இருந்த குருப் -4 காலிப்பணியிடங்கள், தற்போது புதிதாக 727 இடங்கள் சேர்க்கப்பட்டு 4,662 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பும் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


அதேபோல், கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நடத்தப்பட்ட 595 காலியிடங்களுக்கான குருப் 2 மற்றும் குருப்-2 ஏ தேர்விலும் காலியிடங்கள் அதிகரிக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறுகையில், 'குருப்-4 தேர்வில் வெவ்வேறு அரசு துறைகளிடமிருந்து காலிப்பணியிடங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒன்றரை மாதங்களுக்கு மேல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான பணிகள் என்பதால், இந்த காலகட்டத்தில் காலிப்பணியிடங்களை சேர்க்க முடியும். இதனால் குருப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.


அதேபோல், குருப்-2 மற்றும் குருப்-2 ஏ தேர்விலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களையும் டி.என்.பி.எஸ்.சி வாயிலாக நிரப்ப அரசு முடிவுசெய்துள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கல்வித்தகுதிக்கு ஏற்ப அவை குரூப்-4 தேர்வு மூலமாகவோ அல்லது குரூப்-2 அல்லது குரூப் 2 ஏ தேர்வு மூலமாகவே நிரப்பப்படும்.

2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும். அதில் குருப்-1, குருப்-2 மற்றும் 2 ஏ, குருப்-4 தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments