திருவண்ணாமலையில் ஆந்திர பக்தர்கள் அதிகரிக்கக் காரணம் இது தான்... உண்மை, கட்டுக்கதை & ஆன்மீக நம்பிக்கை!

Follow Us

திருவண்ணாமலையில் ஆந்திர பக்தர்கள் அதிகரிக்கக் காரணம் இது தான்... உண்மை, கட்டுக்கதை & ஆன்மீக நம்பிக்கை!

 உலக பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், அக்னி ஸ்தலமாக, ஈசனே மலையாக வீற்றிருக்கும் இடமாக இருக்கும் திருத்தலம் தான் திருவண்ணாமலை.

                                                                              


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கார்த்திகை மாதம் வரும் தீபத் திருவிழாவில் மகா தீபம் ஏற்றுவதை தரிசிக்க, கிரிவலம் செல்ல கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளிலும், சித்திரை மாதம் பௌர்ணமி நாளில், அதாவது சித்ரா பௌர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்வார்கள். ஆனால், விடுமுறை நாட்கள், வார இறுதி விடுமுறை, விசேஷ நாட்கள், மாதா மாதம் வரும் பௌர்ணமி நாட்கள் என்று மாதத்தின் பல நாட்கள் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவில் இருந்து படை எடுக்கும் பக்தர்கள் ஆகும். திருவண்ணாமலையில் திடீரென்று ஆந்திர மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான நபர்கள் ஏன் வருகை தருகிறார்கள், இதற்குக் காரணம் என்ன என்று பார்க்கலாம்.


திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் ஆந்திர பக்தர்கள்

திருவண்ணாமலையில் பல இடங்களில் தெலுங்கு மொழியில் பேசும் மக்களை காணலாம். பகல் இரவு பாராமல் கிரிவலம் செல்லும் ஏராளமான ஆந்திர மக்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் கடைகளின் பெயர்கள், வழித்தடங்கள் உள்ளிட்டவை தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டிருக்கிறது. திருவண்ணாமலையின் அடையாளம் ஒரு பெரிய பகுதி மாறுதலுக்கு உட்பட்டு இருப்பதற்கு ஆந்திர மக்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் வருகை தருவது ஒரு காரணமாகும். அதுமட்டுமில்லாமல் திருவண்ணாமலை அண்ணாமலையாரை ஆந்திர மக்கள் தங்களுடைய குலதெய்வம் என்று வணங்குகிறார்கள்.


ஆந்திர பக்தர்களின் வருகை அதிகரித்ததன் முக்கியக் காரணம்

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிரபலமான தெலுங்கு ஆன்மீக சொற்பொழிவாளர் சாகந்தி கோட்டேஸ்வர ராவ், திருவண்ணாமலை அண்ணாமலையார் தான் தெலுங்கு மக்களின் குலதெய்வம் கூறியது ஒரு முக்கிய காரணமாகும்.


கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் பல youtube சேனல்கள் பிரபலமாகின. பல இன்ஃப்ளூயன்சர்கள் உருவானார்கள். அந்த காலகட்டத்தில், திருவண்ணாமலை பற்றி இவர் பேசிய வீடியோக்கள் வைரலாகின. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் அல்லது அண்ணாமலையார் என்று இவர்கள் கூற மாட்டார்கள். தெலுங்கு மொழி பேசும் மக்கள் அண்ணாமலையாரை அருணாச்சலம் என்று தான் கூறுகிறார்கள். அருணாச்சலம் தான் உங்களது குலதெய்வம் நீங்கள் அருணாச்சலத்தை தரிசிக்க வேண்டும், கிரி பிரதட்சணம் செய்ய வேண்டும் என்று இவர் கூறியது வைரலாக பரவி 2022 முதல் படிப்படியாக லட்சக்கணக்கான ஆந்திர மக்கள் திருவண்ணாமலைக்கு வரும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.


கிரிவலம் சென்றால் கோடீஸ்வரன் ஆகலாம் என்று இவர் சொன்னது, லட்சக்கணக்கான தெலுங்கு மொழி பேசும் மக்கள் திருவண்ணாமலைக்கு செல்வது முக்கிய காரணமாகவும் இருக்கிறது.


சிவபெருமான் குலதெய்வமா?

இந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கூறியது பாதி உண்மை அல்லது திரிக்கப்பட்ட உண்மை என்று சொல்லலாம்.

உண்மையிலேயே சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக இருந்தாலும் சரி ஏகாம்பரநாதராக இருந்தாலும் சரி, ஆதிகும்பேஸ்வரராக இருந்தாலும் சரி யாருக்குமே குலதெய்வம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


திருவண்ணாமலை பர்வத குல மக்கள்

திருவண்ணாமலையில் வசிக்கும் பர்வத குலத்தவருக்கு பார்வதி தேவி குலதெய்வம் ஆவார். இவர்கள் மீனவ குலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குலத்தவர்கள் திருவண்ணாமலையில் மட்டுமல்லாமல் வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள். இவர்களில் ஒருவர்தான் ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை மலை மீது ஏறி மகா தீபத்தை ஏற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் வசிக்கும் பர்வத குலத்தவர்

திருவண்ணாமலையில் வசிக்கும் இந்த குலத்தை சேர்ந்தவர்கள் சிலர் ஆந்திராவிலும் வசிக்கிறார்கள். பல தசாப்தங்களாக, இந்த குலத்தினர் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளுக்கு திருவண்ணாமலைக்கு வந்து குடும்பமாக வந்து தங்கி, தீபத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இதற்காகவே, ஆந்திர மடம் என்று ஒரு தனிப்பட்ட கட்டிடம் உள்ளது. இது இவர்களுக்காகவே கட்டப்பட்டது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஒரு சிலர் ஒரு மாதமும் ஒரு சிலர் 15 நாட்களும் அங்கு செல்வதற்காக உள்ளது. எனவே திருவண்ணாமலைக்கு ஆண்டுதோறும் வருகை தந்த தெலுங்கு பேசும் மக்களின் குலதெய்வம் பார்வதி தேவியே தவிர, சிவபெருமான் இல்லை. இந்தத தகவல் திரித்து கூறப்பட்டிருக்கலாம் அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம்.


கிரிவலம் சென்றால் கோடீஸ்வரன் ஆகலாமா? - மறைந்திருக்கும் உண்மை

கிரிவலம் சென்றால் கோடீஸ்வரன் ஆகலாம் என்பதும் தவறான புரிதலாகும். உண்மையில் குபேர கிரிவலம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை வரும் நாளாகும். கார்த்திகை மாதம், மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முந்தைய நாள், குபேரன் கிரிவலம் சென்று இழந்த செல்வத்தைப் பெற்றார். இந்த நாளில் மாலை ஆறு மணிக்கு மேல் நள்ளிரவு 12 மணிக்குள் குபேரன் ஒவ்வொரு ஆண்டும் கிரிவலம் செல்வார் என்றும், இந்த நாளில் கிரிவலம் சென்றால் குபேரனை போல செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம். இது தான் தவறாக, கிரிவலம் சென்றால் குபேர யோகம், கோடீஸ்வர யோகம் என்று நினைத்து, திருவண்ணாமலைக்கு லட்சக் கணக்கில் ஆந்திர மக்கள் வருகை அதிகரித்து கொண்டே இருக்கிறது.


ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் ஒரு இடத்தின் அடையாளத்தை எப்படி மாற்றும் என்பதற்கு திருவண்ணாமலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எது உண்மையோ, எது தவறான புரிதலோ, திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது பக்தர்கள் கொண்டுள்ள பக்தி அதிகரித்துள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.

 

Post a Comment

0 Comments