தமிழக அரசு, உச்சநீதிமன்ற உத்தரவினை அமல்படுத்தும் நோக்கத்தில், தற்போதைய அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்காக மட்டும், 2026ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்று முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (Special TET) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி அளித்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பதவி உயர்வுகளுக்கு தகுதி இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பதையடுத்து, அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
அத்துடன், ஓய்வுபெற 5 ஆண்டுகளுக்கு குறைவான காலமுள்ள ஆசிரியர்கள் டெட் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணி தொடரலாம் எனவும், ஆனால் பதவி உயர்வு பெறத் தேர்ச்சி அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் அமலாவதற்கு முன்னர் நியமிக்கப்பட்டு, ஓய்வுபெற 5 ஆண்டுகளுக்கு மேல் காலம் உள்ள ஆசிரியர்கள், 2025-ம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்குள் தேர்ச்சி பெற முடியாதவர்கள் பணி விலக வேண்டும் என்றும், அதன்பின்னர் விதிகளின்படி பணிக்கொடை உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு டெட் தேர்வுக்கு ஆசிரியர்களை தயார்படுத்தும் வகையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) வழியாக மாவட்ட மட்டம் மற்றும் வருவாய் வட்டம் அளவில் வார இறுதி நாட்களில் பணியிடைப் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 2026ம் ஆண்டுக்குப் பிறகும் தேவை ஏற்படுமெனின் 2027ம் ஆண்டிலும் டெட் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
0 Comments