தமிழ்நாட்டில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அதற்கான பத்திரங்களை, சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியமாகும்..
சொத்து விவகாரம் என்பதால், இதில் எந்தவிதமான முறைகேடும் நடக்க கூடாது என்பதற்காக, பதிவுத்துறை பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. அந்தவகையில், ஜிபிஎஸ் புகைப்படம் இணைப்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவைகளின் தரத்தினை மேம்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.. அதேபோல உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு ஆகியவைகளில் பிழைகள் ஏற்படுவதால், அந்த பிழைகளையும் உடனடியாக களைய வேண்டியிருக்கிறது.
நில அளவீடு, நில வகைப்பாடு
எனவேதான், நில அளவீடு பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்த, தமிழக அரசு முடிவெடுத்ததுடன், சர்வே எண், அதன் உட்பிரிவு எண்ணுக்குட்பட்ட நிலத்தின் அளவை, துல்லியமாக தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.
இதையடுத்து, நில வகைப்பாட்டுக்கு ஏற்ப நிலங்களை அளவீடு செய்து, சர்வே எண் ஒதுக்குதல் போன்றவைகள் செய்யப்பட்டு வருகின்றன.. மேலும், ஜிபிஎஸ் முறையில் நிலத்தை துல்லியமாக அளக்க, ஏற்கனவே 150 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 200 ரோவர் கருவிகள் சமீபத்தில் வாங்கப்பட்டிருந்தன..
அதிக பரப்பளவு நிலங்களை மிக குறுகிய நேரத்தில் அளப்பதற்கு உதவியாக இருப்பது இந்த ரோவர் கருவிகள்தான்.. இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும்..
ஜிபிஎஸ் போட்டோக்கள்
இதனிடையே, சொத்து பத்திரங்களில் குறிப்பிடப்படும் சொத்து, உண்மையிலேயே உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காகவும், இடம் அமைந்துள்ள நகர், தெரு போன்றவற்றை அறிந்து கொள்ளவும், ஜிபிஎஸ் போட்டோவையும் இணைக்க பதிவுத்துறை சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.
இதனால் சொத்தின் நிலை தெரிவதுடன், அதன் அட்சரேகை, தீர்க்கரேகை அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடத்தின் விபரங்களையும் துல்லியமாக அறிய முடியும். இந்த போட்டோக்களை வைத்துதான், பத்திரப்பதிவின்போது ஆய்வு செய்து, சொத்தின் தன்மை ஆராயப்படும். சொத்தை வாங்கும் மக்களுக்கும் இந்த வசதி, கூடுதல் பாதுகாப்பையும் வழங்குகிறது.
டவுன்லோடு ஆப்
ஆனாலும், இப்படியொரு வசதி இருப்பது பலருக்குமே தெரிவதில்லையாம்.. காரணம், சாதாரண கேமராக்களில் இதுபோன்ற போட்டோக்களை எடுக்க முடியாது.. இந்த பிரத்யேக போட்டோக்களை எடுப்பதற்காகவே சில செல்போனில் தனியார் நிறுவனங்களின் ஆப் உள்ளதால், அதை டவுன்லோடு செய்துதான், ஜிபிஎஸ் போட்டோக்களை எடுக்க முடியும் என்பதால், மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஆரம்பத்திலிருந்தே குறைவாகவே உள்ளது.
இதுகுறித்து விவரம் அறிந்தவர்கள், ஜிபிஎஸ் போட்டோக்களை எடுப்பதற்காக இந்த செயலியை பயன்படுத்தும்போது, சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விபரங்கள் உட்பட தேவையில்லாத தகவல்களும் டவுன்லோடாகி விடுகிறதாம்.. இது பாதுகாப்பு குறைபாடு குறித்த சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
எந்த செயலி - வழிகாட்டுதல்கள்
எனவே இது சொத்து சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், தமிழக அரசே ஒரு செயலியை பிரத்யேகமாக உருவாகக் வேண்டும் அல்லது நம்பகமான, பாதுகாப்பான முறையில் எந்த செயலியை பயன்படுத்த வேண்டும்? என்று வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதையடுத்து, ஜிபிஎஸ் போட்டோக்கள் எடுப்பது, மற்றும் அதன் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரைவில் பதிவுத்துறை விளக்கம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments