மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் மேற்பார்வையில் செயல்படும் ஓரியண்டல் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் ரூ.60,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
Oriental Insurance Company Limited நிறுவனம் என்பது பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகும். மத்திய நிதி அமைச்சகத்தின் மேற்பார்வையில் செயல்படும் இந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. நாடு முழுவதும் 29 பிராந்திய அலுவலகம் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வரும் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும்.
நேபாளம், குவைத் உள்ளிட்ட நாடுகளிலும் இதற்கு கிளைகள் உள்ளன. ஓரியண்டல் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
தமிழ்நாடு - 34, ஆந்திர பிரதேசம்- 26, கேரளா - 37, கர்நாடகா - 47, மகாராஷ்டிரா - 64, டெல்லி - 66, குஜராத் - 28 என 28 மாநிலங்களில் காலியாக இருக்க கூடிய 500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம் ஆகும்.
அதாவது, தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருக்க வேண்டும். கேரளாவில் உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பித்தால் மலையாளம், மகாராஷ்டிராவில் உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பித்தால் மராத்தி ஆகியவை தெரிந்து இருப்பது அவசியம் ஆகும். இது குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
கல்வித் தகுதி;
ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தை ஒரு மொழியாக எடுத்து படித்து இருப்பது அவசியம் ஆகும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மொழியை நன்கு பேச, எழுத தெரிந்து இருக்க வேண்டும். இறுதி கட்ட தேர்வுக்கு முன்பாக உள்ளூர் மொழித்திறன் தேர்வு நடைபெறும். உள்ளூர் மொழியில் புலமை இல்லாத தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு:
21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
டையர் 1, டையர் 2 என இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வுகளுக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 17.08.2025 கடைசி நாளாகும். தேர்வு தேதி: டையர் I: 07.09.2025 & டையர் II: 28.10.2025.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணபிக்க முடியும். தேர்வுக்கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 22,405 - 62,265/-வரை வழங்கப்படும்.
கை நிறைய சம்பளம், மத்திய அரசு வேலை என்பதால் தேர்வர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஒருமுறை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://oicl-cms-media.s3.ap-south-1.amazonaws.com/Advertisement_for_Asstt_Cadre_in_English_1efded0f57.pdf
0 Comments