தமிழ்நாட்டில், கிராமப்புற பெண் தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு, பிணையம்இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பெண்கள் தலைமையிலான தொழில்களுக்கு என பிரத்யேகமாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுயஉதவி குழுக்களில் உள்ள ஒவ்வொரு பெண் உறுப்பினரும், சொந்தமாக தொழில் தொடங்கி, தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். வங்கிகளில் எளிதாக கடன் பெறுவதை உறுதி செய்வதன் மூலம், அவர்களின் தொழில் கனவுகளுக்கு இந்த திட்டம் உயிர் கொடுக்கிறது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்
வேளாண் சார்ந்த தொழில்கள், உணவு பதப்படுத்துதல், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் போன்ற பண்ணை சாரா தொழில்களுக்கு, ரூ.75,000 முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். CGTMSE/CGFMU என்ற மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டங்களின் கீழ் இந்த கடன் வழங்கப்படுவதால், பெண்கள் எந்தவிதமான பிணையமும் அளிக்கத் தேவையில்லை. தொழில்முனைவோர் தங்களின் தேவைக்கேற்ப, நிலையான முதலீட்டிற்கான கடன் அல்லது நிலையான மற்றும் நடைமுறை முதலீடு இணைந்த கடன் என இரு வகைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். வாங்கிய கடனை தவறாமல் உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்தும் பெண் தொழில்முனைவோருக்கு, ரூ.1.5 லட்சம் வரையிலான நிலுவைக் கடனுக்கு, 2% வட்டி மானியமாக வழங்கப்படும். ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு, வங்கிகள் வசூலிக்கும் கடன் உத்தரவாத கட்டணத்தை திரும்ப பெறும் வசதியும் உள்ளது.
யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள்?
விண்ணப்பதாரர், ஏற்கனவே ஒரு பெண் தொழில் முனைபவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் 21 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேடனும். கிராமப்புற சுயஉதவி குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். அவர் இருக்கும் சுயஉதவி குழு, ஆரம்பிக்கப்பட்டு குறைந்தது 2 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்க வேண்டும். மேலும் குழு சார்பில் ஒரு வங்கி கடன் பெற்று, அதனை முழுவதும் கட்டி முடிக்க வேண்டும். கடன் பெற விரும்பும் உறுப்பினர், அந்த குழுவில் 2 ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும். அதே சமயம் குழுவில் கடன் வாங்கி வெற்றிகரமாக திருப்பி செலுத்தி இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள பெண் தொழில்முனைவோர், தங்கள் சிறந்த செயல்பாடுகளுக்கான சான்றுகள், அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகளுடன் கூடிய விண்ணப்பங்களை, ஆகஸ்ட் 8 மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார மகளிர் திட்ட அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், கிராமப்புறப் பெண்களின் தொழில்முனைவுத் திறனை ஊக்குவித்து, அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பெரிய உந்துசக்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தேவையான அடிப்படை ஆவணங்கள்
ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி பாஸ்புக் நகல்கள் .
சுயஉதவிக் குழுவின் தீர்மானம் .
பண்ணை சாரா தொழில்களுக்கு பான் அட்டை, உதயம்/FSSAI/GST பதிவு நகல் மற்றும் மூலப்பொருட்கள்/இயந்திரங்களுக்கான விலைப்புள்ளி
0 Comments