Tamilnadu Government : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மை முதுகெலும்பாக விளங்குகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப இத்துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேளாண் சார்ந்த கல்வி மிகவும் உறுதுணையாக உள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 4000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு 900-க்கும் மேற்பட்டோர் பட்டய படிப்பும் முடித்து வெளிவருகிறார்கள். அவர்களின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாய மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டும் இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்துடனும் மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வேளாண் நிதிநிலை அறிக்கை (2025-26)-ல் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் 1000 எண்கள் உருவாக்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் அல்லது ரூ. 20.00 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக்கடன் மூலம் நிறுவப்பட இருக்கும் உழவர் சேவை மையங்களுக்கு ரூ. 3,00 இலட்சம் முதல் ரூ.6,00 இலட்சம் வரை அல்லது மொத்த முதலீட்டில் 30 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இதற்காக ரூ. 42 கோடி நிதி மாநில நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையங்கள் மூலம் விதை, உரம் மற்றும் விவசாயம் சார்ந்த இடுபொருட்கள் போன்ற விவசாயத் தேவைகள் மட்டுமல்லாமல் பயிர் சாகுபடி, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும்
மதிப்புக்கூட்டுதல் குறித்த வழிகாட்டுதல் போன்ற அனைத்து விவசாயத்தேவைகளையும் ஒரே இடத்தில் பெற்று பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் வேலையில்லாத வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் சுயவேலைவாய்ப்பு பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்திட 100 எண்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நமது மாவட்டத்திற்கு 3 எண்கள் இலக்காக பெறப்பட்டுள்ளது.
1. பயன் பெறுவதற்கான தகுதிகள்
* வயது வரம்பு - 20-45
* கல்வித் தகுதி: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண்பொறியியல் பட்டப்படிப்பு /பட்டயப்படிப்பு
* அரசு மற்றும் அரசுசார் நிறுவனத்தில் பணியில் இருத்தல் கூடாது.
* வங்கி மூலம் கடன் பெற்ற, தொழில் புரிவோர் நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாக இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர் அடிப்படைக் கணினித்திறன் பெற்றிருக்க வேண்டும்
* ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே நிதி உதவி பெற தகுதியுடையவர்.
2. விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
* 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ்
* பட்டப்படிப்புபட்டயப்படிப்புசான்றிதழ்
* ஆதார் அட்டை
* ரேஷன் கார்டு (குடும்ப அட்டை)
* சரக்கு மற்றும் சேவை வரி எண்(GST No)
* நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN card)
* வகுப்புச் சான்றிதழ் (Community Certificate)
* பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம்
* வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் (Sanction Memo)
* விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report)
3. பயன் பெறுவதற்கான நிபந்தனைகள்
* உழவர் நலசேவை மையம் அமைக்க விரும்பும் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பு/ பட்டயப்படிப்பு முடித்த நபர்கள் விதை விற்பனை உரிமம், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
* இத்திட்டத்தில் இணையும் பயனாளிகள் உரிமம் இல்லாமல் இருப்பின். தேவையான உரிமம் பெறுவதற்கு வேளாண்மை துறையை அனுகி உரிமம் பெற வேண்டும்.
* இத்திட்டத்தில் இணைய விரும்பும் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு படித்த நபர்கள் ரூ.10.00 இலட்சம் அல்லது ரூ. 20.00 இலட்சத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கியில் கடனுதவி பெற வேண்டும். மேலும், வங்கி கடன் வழங்கிய உத்தரவு கடிதத்தினை சமர்ப்பித்தபின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
* இத்திட்டத்தில் இணைய விரும்பும் விண்ணப்பதாரர்கள். உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விரும்பும் மதிப்பீட்டுக்கு ஏற்றவாறு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், தொழில்நுட்பத்தினை மேம்படுத்திடும் வகையில் உழவர் பயிற்சி நிலையம் / வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
4. உழவர் நல சேவை மையம் அமைப்பதற்கான இடம்
* சொந்த சொந்த இடம் அல்லது வாடகை / குத்தகை ஒப்பந்தம்
* சொந்த இடமாக இருப்பின் சொத்து வரி ரசீது / மின்சார கட்டண ரசீது / குடிநீர் வரி ரசீது
* வாடகை இடமாக இருப்பின் உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் (NOC)
5. தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்
ரூ. 10 இலட்சம் திட்ட மதிப்பீட்டுக்கு 300 சதுர அடி பரப்பிலும், ரூ. 20 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் தொடங்க உழவர் நல சேவை மையம் 600 சதுர அடி பரப்பிலும் இடுப்பொருள் இருப்பு வைக்கத் தக்க வகையில் இடம் இருக்க வேண்டும்.
6 செயல்படுத்தும் துறைகள் :
* வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம்
* வேளாண்மைத்துறை
* தோட்டக்கலைத்துறை
* வேளாண் பொறியியல் துறை
எனவே, இத்திடத்தில் பயனடைய விரும்பும் வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு/பட்டையப் படிப்பு முடித்த நபர்கள் வங்கி நடைமுறைகளைப் பின்பற்றி கடன் பெற்றபின் இத்திட்டத்தில் மானியம் பெற https://www.tnagrisnet.tn.gov.in/kaviadp|register என்ற இணையதளம் முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்
மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநர், வேளாண் வணிக அலுவலக வேளாண் அலுவலர்களை (9840706334, 9994895893 மற்றும் மின்னஞ்சல் முகவரி: ddabthirupattur2023@gmail.com) தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்கள் மற்றும் வழிமுறைகளை பெற்றுக்கொள்ளலாம்.
0 Comments