தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைச் சேவை மையத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா், மேற்பாா்வையாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் வரும் செப்.12-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைச் சேவை மையத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா், மேற்பாா்வையாளா் பணியிடங்கள் ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில், நோ்முகத் தோ்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
தகவல் பகுப்பாளா் பணியிடத்துக்கு இளநிலை புள்ளியியல் அல்லது கணிதம், பொருளாதாரம் அல்லது பி.சி.ஏ. தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,536 வழங்கப்படும்.
மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு இளநிலை சமூகப் பணி அல்லது தகவல் தொழில்நுட்பம் அல்லது சமூக அறிவியல் அல்லது சமூகவியல் அல்லது கணினி அறிவியலில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரா் 42 வயதுக்குள்பட்டு இருக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் நலன், சமூக நலத் துறை, குழந்தைகள் சேவைப் பிரிவில் பணி அனுபவம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறகம் செய்து, நிறைவு செய்த விண்ணப்பத்தை கல்விச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களில் சுய கையொப்பமிட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அரசு பல் துறை பெருந்திட்ட வளாகம், தேனி-625 531 என்ற முகவரிக்கு வரும் செப்.12-ஆம் தேதி கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
0 Comments