கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சில முக்கிய தேவைகளுக்கு மட்டுமே ஏடிஎம் சென்று பணம் எடுத்து மக்கள் செலவு செய்கின்றனர்.
மற்றபடி ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் யுபிஐ மூலம் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தான் இப்போது அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் யுபிஐ சேவையில் பல புதிய மாற்றங்கள் வர உள்ளதாகத் தகவல் வெளியாக உள்ளது. அதாவது பின் (PIN) நம்பருக்கு பதிலாக பயோமெட்ரிக் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியைத் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) விரைவில் அமலுக்குக் கொண்டு வரவுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது தற்போது யுபிஐ பணப்பரிவர்த்தனைக்குப் பின் நம்பர் பயன்படுத்தப்படும் நிலையில், அதனைத் தவிர்த்து கைரேகை, முக அடையாள வசதிகளுடன் பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று கூறப்படுகிறது. முன்பு கூறியது போல் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களில் தற்போது 80 % க்கும் அதிகமானவை யுபிஐ மூலம் தான் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேபோல் பின் நம்பரை மறந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பணமோசடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் பயோமெட்ரிக் முறை இந்த சிக்கல்களைத் தீர்க்கலாம். ஆகவே பின் நம்பரை முறையை விட இது பாதுகாப்பானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த புதிய மாற்றங்கள் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பயோமெட்ரிக் முறை பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் நாளை (ஆகஸ்ட் 1) முதல் யுபிஐ சேவையில் சில முக்கிய மாற்றங்கள் வர உள்ளன. இது குறித்த விரிவான தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.
ஒரு நாளில் 50 முறை: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகளில், ஒரே நாளில் 50 முறை மட்டுமே கணக்கு இருப்பு (Account Balance) பார்வையிட முடியும். அதாவது ஒவ்வொரு யுபிஐ செயலிகளிலும் 24 மணி நேரத்திற்கு உங்களுக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே பேங்க் பேலன்ஸ் பார்க்க அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொபைல் எண்: ஆகஸ்ட் 1 2025 முதல் உங்களது மொபைல் எண் எந்த வங்கிக் கணக்குகளுடன்(linked accounts)
இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும். அதாவது பல யுபிஐ செயலிகள் பின்னணி செயல்பாடுகளில் மீண்டும் மீண்டும் உங்கள் linked bank accounts-ஐ சரிபார்க்கும். இது சேவையை மெதுவாக்கும், backend-ல் அதிக சுமையை ஏற்படுத்தும். இதை தவிர்க்கும் வகையில், ஒரு நாளுக்கு 25 முறை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ டெபிட்: Auto-Debit என்பது உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தானாகப் பணம் பிடிக்கப்படும் நடைமுறை
ஆகும். Netflix, Hotstar போன்ற ஓடிடி சந்தாக்கள், SIP முதலீடுகள், இஎம்ஐ, காப்பீடு கட்டணம் போன்றவை தானாக செலுத்தக் கூடிய கட்டணங்கள் ஆகும். வரும் ஆகஸ்ட் 1 முதல் இந்த ஆட்டோ டெபிட் முறையில் நேரம் மாற்றியமைக்கப்படும் அதன்படி காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல் 5 மணி வரை, இரவு 9:30 மணிக்கு பிறகு ஆகிய நேரங்களில் மட்டுமே இனி பணம் பிடித்தம் செய்யப்படும். எனவே இந்த நேரங்களுக்கு மட்டுமே ஆட்டோ டெபிட் பணம் செலுத்த முடியும் என்பதைக் கவனிக்கலாம்.
பரிவர்த்தனை நிலை: சர்வீஸ் ப்ரோவைடர்கள் அல்லது வங்கிகள் மூலம் பரிவர்த்தனையின் நிலையைச் (Transaction Status) சரிபார்க்கும் எண்ணிக்கையை புதிய விதிகளின் படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இனி அதிகபட்சம் 3 முறை மட்டுமே பரிவர்த்தனை நிலையைச் சரிபார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இதில் இரண்டு சரிபார்ப்பு முயற்சிகளுக்கிடையில் குறைந்தது 90 நொடிகள் இடைவெளி இருக்க வேண்டும்
0 Comments