ஜுன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) துணைத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 25) வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதன் மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:
மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்
ஜூன் , ஜூலை 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் பிளஸ் 1 அரியர் (மார்ச் 2025 பருவத்திற்கு முந்தைய பருவத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்) துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள், தேர்வு முடிவினை, மதிப்பெண் பட்டியலாக (Statement Of Marks) 25.07.2025 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் முதல் பெறலாம்.
விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஜூன் / ஜூலை 2025, மேல்நிலை துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, 28.07.2025 ( திங்கட்கிழமை) மற்றும் 29.07.2025 (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று, விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் எவ்வளவு?
ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275,/- கட்டணத்தை பணமாக செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்துகொள்ளலாம்),
குறிப்பு: விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும்.
எப்போது?
விடைத்தாள் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் வெளியிடப்பட உள்ளது.
மறு கூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.dge.tn.gov.in/
0 Comments