ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் இனி இந்த தேர்வு எழுத முடியாது - மத்திய அரசின் குட் நியூஸ்

Follow Us

ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் இனி இந்த தேர்வு எழுத முடியாது - மத்திய அரசின் குட் நியூஸ்

 

வங்கிப் பணியாளர் தேர்வாணையம் ஐபீபிஎஸ் நடத்தும் தேர்வுகளில் விண்ணப்பதாரரின் அடையாளத்தை உறுதி செய்யும் வகையில் ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்திக் கொள்ள அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.

                                                                              


இதனால் இனி வங்கி தேர்வு எழுதுபவர்களுக்கு ஆதார் அங்கீகார சரிபார்ப்பு கட்டாயமாகியுள்ளது. ஆதார் அங்கீகார சரிபார்ப்பு இல்லாமல் இனி வங்கி தேர்வுகள் எழுத முடியாது. ரயில்வே தேர்வு எழுதுவதற்கு ஏற்கனவே ஆதார் அங்கீகார சரிபார்ப்பு நடைமுறையில் இருக்கிறது. இந்த தேர்வு எழுதுபவர்களுக்கு ஆதார் அங்கீகார சரிபார்ப்பு என்றால் என்ன? என்பது தெரிந்திருக்கும்.

அதாவது, தேர்வு நடக்கும் அறையில், விண்ணப்பதாரரின் கைரேகை மற்றும் புகைப்படம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும். உங்களின் ஆதார் தரவுகளுடன் அவை சரியாக பொருந்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவீர்கள். இதனால் தேர்வுகளில் நடக்கும் மோசடிகளை முழுமையாக தடுக்க முடியும் என்பதற்காக இந்த நடவடிக்கை பின்பற்றப்படுகிறது.

வங்கி பணியாளர் தேர்வாணயத்துக்கு ஆதார் அங்கீகார சரிபார்ப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்திருப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் தேர்வுகளில் விண்ணப்பதாரர் சரிபார்ப்புக்கு அந்நிறுவனம் ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை நிதியமைச்சகத்தின் நிதிச்சேவைகள் துறை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அறிவிக்கைக்கான இணைப்பு : https://egazette.gov.in/(S(ah0mujgqxxi0pvmyp24tjyqp))/ViewPDF.aspx

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடனான கலந்தாலோசனைக்குப் பின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.தேர்வின் உண்மைதன்மையை மேம்படுத்தவும், தேர்வின் போது ஆள்மாறாட்டம் மற்றும் இதர முறைகேடுகளை தடுப்பதற்காகவும், வங்கி, நிதிச்சேவைகள், காப்பீடு ஆகிய துறைகளில் பணிநியமன நடைமுறையில் நேர்மையை வலுப்படுத்துவதும் மத்திய அரசும், தேர்வுகளை நடத்தும் வங்கி பணியாளர் தேர்வாணையம் ஐபீபிஎஸ் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது பணிநியமன நடைமுறையை நியாயமாகவும், வெளிப்படை தன்மையோடும் இருப்பதை உறுதிசெய்வது மட்டுமின்றி, மோசடி செய்பவர்களால் ஏற்படும் இழப்புகளிலிருந்து உண்மையான தேர்வர்களுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை பாதுகாப்பு அளிக்கிறது. அடையாள சரிபார்ப்பை எளிமைப்படுத்துவதுடன், விரைவுபடுத்தவும் செய்கிறது. மேலும் நிர்வாகச் சுமையை குறைத்து ஒட்டுமொத்த தேர்வு மற்றும் தெரிவு நடைமுறையை மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. எனவே, வங்கி தேர்வுகளுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு குட் நியூஸ் என்றே சொல்லலாம். மோசடிகள் நடக்குமோ, அதனால் நமக்கான வாய்ப்பு பறிபோகுமோ என எண்ணுபவர்களுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும்.

Post a Comment

0 Comments