இந்தியா கடந்த ஆண்டு இ-பாஸ்போர்ட்டுகளை வழங்கத் தொடங்கியது. ஏப்ரல் 1, 2024 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்த இ-பாஸ்போர்ட் வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) சேவா யோஜனா 2.0 பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
இந்த அதிநவீன மின்னணு பாஸ்போர்ட்டுகள் பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்திய குடிமக்களின் பயணச் செயல்முறையை சீராக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய பாஸ்போர்ட் அம்சங்களுடன் மேம்பட்ட தொழில்நுட்பத்தை இணைத்து, சிப்கள் அடங்கிய இந்த இ-பாஸ்போர்ட் மக்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பாகச் சேமித்து, நன்பக தன்மையை அதிகப்படுத்தி உள்ளன.
இந்த முயற்சி இந்தியாவின் பாஸ்போர்ட் முறையை நவீனமயமாக்குவதையும், செயல்திறனை மேம்படுத்துவதையும், சர்வதேச பயணத்திற்கான மிகவும் பாதுகாப்பான மற்றும் வசதியான ஆவணத்தை பயணிகளுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இ-பாஸ்போர்ட் இந்தியா முழுவதும் நாக்பூர், புவனேஸ்வர், ஜம்மு, கோவா, சிம்லா, ராய்ப்பூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், சென்னை, ஹைதராபாத், சூரத், ராஞ்சி மற்றும் டெல்லி ஆகிய 13 நகரங்களில் கிடைக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மார்ச் 3ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மார்ச் 22 ஆம் தேதிக்குள் 20,700 க்கும் மேற்பட்ட இ-பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?
இ-பாஸ்போர்ட் என்பது பாரம்பரிய பாஸ்போர்ட்டின் நவீன, மேம்பட்ட பதிப்பாகும். இது பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இது அடிப்படையில் ஒரு நிலையான பாஸ்போர்ட், ஆனால் அதன் அட்டையின் உள்ளே ஒரு சிறிய RFID சிப் உட்பொதிக்கப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட தகவல்கள், கைரேகைகள் மற்றும் முக விவரங்கள் போன்ற பயோமெட்ரிக் தரவுகளை பாதுகாப்பாக சேமிக்கிறது. இது பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் அடையாளத்தை மிகவும் துல்லியமாக சரிபார்க்க உதவுகிறது. இ-பாஸ்போர்ட் போலி பாஸ்போர்ட்கள் அல்லது சேதப்படுத்துதலை தடுக்கிறது. இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயண ஆவணத்தை வழங்குகிறது.
இ-பாஸ்போர்ட் ஏன் முக்கியமானது?
இ-பாஸ்போர்ட் முயற்சியின் முதன்மை நோக்கம், மேம்பட்ட RFID சிப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு மோசடியை திறம்பட தடுப்பதாகும். இது போலி அல்லது நகல் பாஸ்போர்ட்களை உருவாக்குவதைத் தடுக்க உதவுவது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளுக்கு செல்லும் போது அடையாளச் சரிபார்ப்பு செயல்முறையை கணிசமாக துரிதப்படுத்துகிறது. தற்போது, இந்த புதுமையான இ-பாஸ்போர்ட் சேவைகள் 12 நகரங்களில் கிடைக்கின்றன, இது மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வழங்குகிறது. இவற்றின் நன்மைகளை உணர்ந்து, கூடுதல் நகரங்களுக்கு இ-பாஸ்போர்ட் சேவைகளை விரிவுபடுத்தும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது, இது பாதுகாப்பான பயணத்தை நாடு முழுவதும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது. உங்களிடம் ஏற்கனவே செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருந்தால், உடனடியாக இ-பாஸ்போர்ட் அப்பளை செய்ய வேண்டிய அவசியமில்லை.
0 Comments