பட்டாவில் புதிய பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய புதிய வசதி அறிமுகம்

 பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                 


தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர்புறங்களில் பல்வகையான நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் பல்வேறு இணையவழிச்சேவைகள் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக, எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா, சிட்டா, 'அ' பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையையும் அறிந்து கொள்ளலாம்.


ஆனால், பல பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், இறந்தவரின் பெயர்களை நீக்கவும் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்கவும் இணையதளம் மூலமாகவும் அல்லது இ சேவை மையங்களில் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்பதை பொதுமக்கள் அறியும் வண்ணம் மாவட்ட அளவில் பத்திரிக்கை செய்தியாக வெளியிட வேண்டும் என்று நில நிர்வாக ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். மேலும், இணையதளம் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்களை வழிகாட்டு நெறிமுறைகளின் படி பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments