இந்தியாவில் முதல்முறையாக ஓடும் ரயிலில் ஏடிஎம் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து மன்மாத்துக்கு செல்லும் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
ரயிலின் ஏசி கோச்சில் ஏடிஎம் பொருத்தப்பட்டு, அதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓடும் ரயலில் கூட மக்களால் பணத்தை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே:
நாட்டில் ரயில்களை மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு மட்டும் இதற்காக 22 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய அரசு செலவு செய்துள்ளது. ரயிலில் பயணிகள் கொள் திறனை மேம்படுத்தவும் பயணிகளை வேகமாகவும் பாதுகாப்பாகவும் அழைத்த செல்ல இந்த பணம் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 100 வந்தே பாரத் ரயில்கள் உள்பட 772 ரயில் சேவைகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக மாநிலங்களவையில் கடந்தாண்டு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்திருந்தார். புதிய ரயில் பாதைகளை அமைக்கவும் மின்மயமாக்கவும் அரசு தற்போது முனைப்பு காட்டி வருகிறது. மேலும், பல்வேறு விதமான வசதிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாட்டில் முதல்முறையாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து மன்மாத்துக்கு செல்லும் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில் ஏடிஎம் வசதி கொண்டு வரப்பட உள்ளதால் ரயிலை விட்டு கீழே இறங்காமல் கூட பயணிகளால் பணத்தை எடுக்க முடியும். இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் வருகிறது ஏடிஎம் வசதி:
இந்திய ரயில்வேயின் புதுமையான மற்றும் கட்டணம் அல்லாத வருவாய் யோசனை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பூசாவல் மண்டலமும் மகாராஷ்டிரா வங்கியும் இணைந்து இந்த திட்டத்தை சாத்தியப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. பயணம் முழுவதிலும் ஏடிஎம் இயந்திரம் சீராக செயல்பட்டது. இருப்பினும், சுரங்கப்பாதைகள் மற்றும் குறைந்த மொபைல் சிக்னல் இருக்கும் இடங்களான இகத்புரி மற்றும் கசாரா இடையேயான பகுதியில் கொஞ்ச நேரம் ஏடிஎம் செயல்படவில்லை" என்றார்கள்.
இதுகுறித்து பூசாவல் கோட்ட ரயில்வே மேலாளர் இதி பாண்டே கூறுகையில், "நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. மக்கள் இப்போது பயணம் செய்யும் போது பணத்தை எடுக்க முடியும். இயந்திரத்தின் செயல்திறனை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்.
மக்கள் மத்தியில் பிரபலமாகுமா?
ஏசி பெட்டியில் இந்த ஏடிஎம் வைக்கப்பட்டிருந்தாலும், ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருப்பதால் பஞ்சவதி எக்ஸ்பிரஸின் 22 பெட்டிகளிலிருந்தும் பயணிகள் ஏடிஎம்-ஐ பயன்படுத்தலாம். பணம் எடுப்பதைத் தவிர, செக் புக்கை பெறவும் பண விவரத்தை அறியவும் ஏடிஎம்மைப் பயன்படுத்தலாம்" என்றார்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மும்பை - ஹிங்கோலி ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணிகளும் இந்த ஏடிஎம்-ஐ பயன்படுத்தலாம். ஏனெனில், பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலும் அதே ரயில் ரேக்கைதான் பகிர்ந்து கொள்கிறது. ஏடிஎம் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஏடிஎம்மில் ஷட்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
பயணிகள் மத்தியில் இந்த சேவை பிரபலமடைந்தால், மேலும் பல ரயில்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments