அங்கன்வாடி ஊழியர் பணியிடங்கள்.. சம்பளம் எவ்வளவு.. விண்ணப்பிப்பது எப்படி? தேனி கலெக்டர் விளக்கம்

 தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் 156 அங்கன்வாடி ஊழியர், 1 குறு அங்கன்வாடி ஊழியர் மற்றும் 29 அங்கன்வாடி உதவியாளர் என 186 பணியிடங்கள் காலியாக உள்ளன.

                                                                       


இந்த காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. எனவே தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.


தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் 156 அங்கன்வாடி ஊழியர், 1 குறு அங்கன்வாடி ஊழியர் மற்றும் 29 அங்கன்வாடி உதவியாளர் என 186 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. மாவட்டத்தில் வட்டாரம், திட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி ஊழியர், குறு அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனச்சுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகங்களிலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அங்கன்வாடி ஊழியர் ரூ.7,700 என்ற தொகுப்பூதியத்திலும், குறு அங்கன்வாடி ஊழியர் ரூ.5,700 என்ற தொகுப்பூதியத்திலும், அங்கன்வாடி உதவியாளர் ரூ.4,100 என்ற தொகுப் பூதியத்திலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள். தொடர்ந்து 12 மாத காலம் பணியினை முடித்தபிறகு, அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவார்கள். இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

அங்கன்வாடி ஊழியர் மற்றும் குறு அங்கன்வாடி ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்க பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலிப்பணியிடம் நிரப்ப விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள குழந்தை மையம் அமைந்துள்ள அதே கிராமத்தை சேர்ந்தவராகவும், அதே கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர், அறிவிக்கப்பட்டுள்ள நகராட்சியில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு அல்லது அருகில் உள்ள வார்டு பகுதியை சேர்ந்தவராகவோ, மையம் அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வார்டை சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து நாளை (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 23-ந்தேதி கடைசி நாள். விண்ணப்பத்தை அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.






Post a Comment

0 Comments