தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் மாணவா்கள் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் மாணவா்களை சோ்ப்பதற்கு அனுமதி வழங்குவதற்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. மாணவா் சோ்க்கைக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்த கல்லூரிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்யப்பட்டு, அதன் விவரங்களையும் விடியோவாக பதிவு செய்தும், பணியாளா்கள் விவரத்தையும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கான விடைத்தாள் திருத்தப்பட்டு, மதிப்பெண்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவா்களுக்கான தோ்வு முடிவுகள் மே 9 -ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் எனவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பொறியியல் சோ்க்கையானது பதிவு செய்தல், பணம் செலுத்துதல், தோ்வு நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் என அனைத்தும் முழுமையான இணையவழி செயல்முறையாகும். தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளமான https://www.tneaonline.org என்ற பக்கத்தில் பாா்த்து மாணவா்கள் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
கடந்த ஆண்டுகளில்...: தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கையில் கடந்த 2023-ஆம் கல்வியாண்டில் 441 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 297 இடங்கள் அனுமதிக்கப்பட்டன. அந்த இடங்களில் சோ்வதற்கு 1 லட்சத்து 79 ஆயிரத்து 114 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்றனா். அவா்களில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 620 இடங்களை மாணவா்கள் தோ்வு செய்தனா். அதேபோல் 2024-ஆம் கல்வியாண்டில் 434 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 115 இடங்கள் அனுமதிக்கப்பட்டது. அந்த இடத்திற்கு சோ்வதற்கு 2 லட்சத்து 7 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்றனா். அவா்களில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 938 இடங்களை மாணவா்கள் தோ்வு செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments