திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள, 10 அங்கன்வாடி பணியாளர்; 33 உதவியாளர் பணியிடத்துக்கான நேரடி நியமனம் நடக்கிறது.
அங்கன்வாடி பணியிடங்களில் பணியாற்ற விரும்புவோர், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். வரும், 23ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
அங்கன்வாடி பணியாளர் பணிக்கு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 25 முதல், 35 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்கலாம். விதவை, ஆதரவற்ற பெண், எஸ்.சி., -எஸ்.டி., வகுப்பில், 25 முதல், 40 வயது வரையிலும், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், 25 முதல் 38 வயது வரையுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
உதவியாளர் பணிக்கு, 20 முதல், 40 வயது வரையுள்ளவர்களும், சிறப்பு பிரிவினராக இருந்தால், 45 வயது வரையுள்ளவர் களும், மாற்றுத்திறனாளிகள், 43 வயது வரையுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர், மையம் அமைந்துள்ள அதே கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்; நகர்பகுதியில், அதே வார்டு அல்லது அருகில் உள்ள வார்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஜாதிச்சான்று, வாக்காளர் அட்டை ஆகிய நகல்களை சுய சான்றொப்பம் இட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களை, சுய சான்றொப்பம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
காலியிட விவரம், இட சுழற்சி முறைகள் குறித்து, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் தகவல் வெளியிடப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
0 Comments