1000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க தலா ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆதாவது;
1. கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் உதவி தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழை எளிய, நடுத்தர மக்கள், சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்தம் பொருளாதார மேம்பாட்டிற்கென நாட்டிலேயே பல்வேறு முன்னோடித் திட்டங்களை நூறாண்டுகளுக்கும் மேலாக நமது கூட்டுறவு சங்கங்கள் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றன. மாநிலம் முழுவதும் சீரான பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஏதுவாக, அனைத்து வகைக் கூட்டுறவுச் சங்கங்களும் நடப்பிலுள்ள பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்நிதியாண்டில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடன் உதவி வழங்கும்.
2. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் விண்ணப்பித்த அன்றே வழங்கப்படும். விவசாயப் பெருங்குடி மக்கள் பயிர்க்கடன் பெறுவதற்கு தொடர்புடைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பித்து, ஒரு வார காலத்திற்குள் அக்கடனைப் பெறும் நடைமுறையே தற்பொழுது இருந்து வருகிறது. இந்நடைமுறையில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, இணையவழியில் (Online) பயிர்க்கடன் விண்ணப்பிக்கும் நடைமுறையும், விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடனை நேரடியாக வழங்கும் நடைமுறையும் தருமபுரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக (Pilot) செயல்படுத்தப்பட்டு, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
3. நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூபாய் ஐந்து இலட்சம் வரை கடன் வழங்கப்படும். வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்தம் பெயரில் இரண்டு ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கடன் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்கப்படும்.
4. விவசாயிகளின் விளை பொருட்களைச் சேமித்துப் பதப்படுத்தவும், மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும் ஏதுவாகக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகக் கடனுதவி வழங்கப்படும். விவசாயிகள் தமது விளைபொருட்களைச் சேமித்துப் பதப்படுத்தவும், மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும் ஏதுவாக விவசாய உற்பத்திக் குழுக்கள், சுய உதவிக் குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள் (JLG) என அரசால் அங்கீகரிக்கப்பட்ட குழுக்களுக்கு இது தொடர்பான கடன்கள் வழங்கப்படும்.
5. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆயிரம் மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கொள்முதல் செய்வதற்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய 1000 மகளிருக்கு அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ (e-Auto) கொள்முதல் செய்வதற்குக் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக தலா ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
6. நட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் "உறுப்பினர் ஆதரவு திட்டத்தின்" கீழ் இலாபம் ஈட்டும் சங்கங்களாக மாற்றப்படும். 2023-2024-ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, நடப்பு ஆண்டு நட்டம் மற்றும் குவிந்த நட்டத்தில் செயல்படும் சுமார் 950 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் "உறுப்பினர் ஆதரவுத் திட்டத்தின்" கீழ் (Member Support Programme) தாய் சங்கங்களான மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி பெற்றும், நிபந்தனைகளை எளிதாக்கப்பட்டு வைப்புகள் சேகரித்தும் 31.03.2026-க்குள் இலாபம் ஈட்டும் சங்கங்களாக மாற்றப்படும்.
7. கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு இணைய வழி சேமிப்புக் கணக்கு தொடங்குதல், கடன் அட்டை வழங்குதல், கைபேசி வங்கிச் சேவை முதலிய சேவைகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் உள்ள நடைமுறைகளை எளிதாக்கவும், கால தாமதத்தைத் தவிர்க்கவும், இதர வணிக வங்கிகளைப் போல இணைய வழியில் சேமிப்புக் கணக்கு தொடங்குதல், பல்வேறு வகையான கடன்களை இணைய வழியில் பெறுதல், கைபேசி வங்கிச் சேவை (Mobile Banking), கடன் அட்டை (Credit Card) போன்ற வங்கிச் சேவைகள் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்கப்படும்.
8. மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் அனைத்துக் கிளைகளிலும் தேவையின் அடிப்படையில் தனிநபர் பாதுகாப்புப் பெட்டக வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும். வாடிக்கையாளர்களின் பெருகி வரும் தனிநபர் பாதுகாப்புப் பெட்டக தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் தேவையின் அடிப்படையில் தனிநபர் பாதுகாப்புப் பெட்டக வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அண்ணாநகர் கிளை, காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தாம்பரம் கிளை, கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகக்கிளை, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழங்காநத்தம் கிளை, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கரிவலம்வந்தநல்லூர் கிளை மற்றும் வேங்கடேஸ்வராபுரம் கிளை, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஓசூர் கிளை ஆகிய 7 கிளைகளில் கூடுதல் தனிநபர் பாதுகாப்புப் பெட்டக வசதி ஏற்படுத்தப்படும்.
9. மாத்தூர், புழுதிவாக்கம், திருநாகேஸ்வரம், சாலியமங்கலம், செக்கானூரணி, தென்னிலை ஆகிய இடங்களில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் தொடங்கப்படும். வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கிட ஏதுவாக சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மாத்தூர் மற்றும் புழுதிவாக்கம் ஆகிய இடங்களிலும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் திருநாகேஸ்வரம் மற்றும் சாலியமங்கலம் ஆகிய இடங்களிலும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை செக்கானூரணியிலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை கரூர் மாவட்டம் தென்னிலையிலும் தொடங்கப்படும்.
10. வசிப்பிடத்திற்கு அருகிலேயே விவசாயிகளுக்குத் தேவையான சேவைகளை வழங்கிட ஐந்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் கிளைகள் தொடங்கப்படும். அரியலூர் மாவட்டம் தேவாமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு வானதிரையன்பட்டினம்; பரணம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு இரும்புலிக்குறிச்சி; ஈரோடு மாவட்டம் கொடுமுடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு சாலைப்புதூர்; இராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு கூடலூர், மாம்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு வாழைப்பந்தல் ஆகிய ஐந்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் கிளைகள் புதிதாகத் தொடங்கப்படும்.
11. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை புஞ்சை புளியம்பட்டியில் தொடங்கப்படும். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாகச் செயல்பட்டு மக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை வழங்கி அப்பகுதியின் பொருளாதார முன்னேற்றத் திற்குப் பெரிதும் காரணமாகத் திகழ்ந்து வருகின்றது. இந்த வங்கியின் சேவை அருகில் உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதி மக்களுக்கும் சென்றடைய ஏதுவாக சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கியின் புதிய கிளை புஞ்சைபுளியம்பட்டியில் தொடங்கப்படும்.
12. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தின் புதிய கிளை ஈஞ்சம்பள்ளியில் தொடங்கப்படும். 1958ஆம் ஆண்டு தொடங்கி ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் வேளாண் இடுபொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு அண்மையில் நகர கூட்டுறவுக் கடன் சங்கமாக மாற்றம் செய்யப்பட்ட மொடக்குறிச்சி சங்கத்தின் கிளை பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஈஞ்சம்பள்ளியில் தொடங்கப்படும்.
0 Comments