பிள்ளைகளுக்கு தானமாக எழுதி தந்த சொத்துக்களை, பெற்றோர்கள் திரும்ப பெற முடியுமா? தான செட்டில்மென்ட் செய்த பிறகு, அந்த சொத்துக்களில் , பெற்றோருக்கு மீண்டும் உரிமை உள்ளதா?
இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தாலும், தற்போது சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவை, வழக்கு ஒன்றில் பிறப்பித்திருக்கிறது. அது என்ன வழக்கு? தான பத்திரங்கள் குறித்து நீதிமன்றங்கள் சொல்வதென்ன?
குடும்ப சூழல்கள் காரணமாக, தங்களது வாரிசுகளுக்கு பெற்றோர்கள் செட்டில் மென்ட் பத்திரம் எழுதி தந்துவிடுகிறார்கள்.. இதில் ஒருசில பிள்ளைகள், சொத்துக்களை பெற்றுக் கொண்டு, தாய்-தகப்பனை கடைசி காலத்தில் கவனிக்காமல் புறக்கணித்துவிடுகிறார்கள். இதன்காரணமாக சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், தங்குவதற்கும் இடமில்லாமல், மாவட்ட கலெக்டர்களிடம், அந்த பெற்றோர்கள் கண்ணீருடன் புகார் தரும் பரிதாபம் ஏற்படுகிறது.
சுப்ரீம் கோர்ட் அதிரடி அறிவிப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சுப்ரீம் கோர்ட் வழக்கு ஒன்றில் முக்கிய உத்தரவினை பிறப்பித்திருந்தது. அதில், "பிள்ளைகள் கவனிக்காவிட்டால் "பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்"படி பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை, சொத்துக்களை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதிகொடுத்தது செல்லாது என்று அறிவிக்கமுடியும்" என உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
சொத்துக்களை மொத்தமாக, தங்கள் பிள்ளைகளுக்கு எழுதி தந்துவிட்டு, நடுத்தெருவில் விழிபிதுங்கி நிற்கும் எத்தனையோ வயதான பெற்றோர்களுக்கு, சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்ப்பானது, வயிற்றில் பாலை வார்த்து வருகிறது.
இந்நிலையில், இதுபோன்ற வழக்கு ஒன்று சென்னை ஹைகோர்ட்டில் மீண்டும் நடந்துள்ளது.. அதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி.. இவருடைய மகன் கேசவன்.. திருமணமாகிவிட்டது..
செட்டில்மென்ட் பத்திரம்
நாகலட்சுமி தன்னுடைய கேசவனுக்கு ஆதரவாக ஒரு செட்டில்மென்ட் பத்திரத்தை எழுதி தந்துள்ளார். எப்படியும் மகனும், மருமகள் மாலாவும் தன்னை கவனித்து கொள்வார்கள் என்று நம்பினார்.. ஆனால், இருவருமே நாகலட்சுமியை கவனிக்காமல் விட்டுவிட்டனர்.. ஒருகட்டத்தில் கேசவன் இறந்துவிட்டார்.. தன்னுடைய கணவன் இறந்த பிறகும், நாகலட்சுமியை மருமகள் மாலா கவனிக்கவில்லையாம்.. இதனால், வாழ வழியின்றி, நாகப்பட்டினம் ஆர்டிஓ-வை சந்தித்து மனு அளித்தார் நாகலட்சுமி..
இதையடுத்து, நாகலட்சுமியிடம் ஆர்டிஓ இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, பெற்ற மகனுக்கு எல்லா சொத்தையும, தான செட்டில்மென்ட்டாக நாகலட்சுமி எழுதி கையெழுத்திட்டது தெரியவந்தது. நாகலட்சுமியின் இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து, Settlement Deed எனப்படும் சொத்து வழங்கல் உடன்படிக்கையை ரத்து செய்ய தீர்மானித்தார்.
அப்பீல் போன மருமகள் மாலா
ஆனால், இதை எதிர்த்து மருமகள் மாலா அப்பீல் செய்தார்.. ஆனால் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. பிறகு, சென்னை ஹைகோர்ட்டுக்கு அப்பீல் போனார். இந்த மேல்முறையீடு மனுவானது, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "முதியோர் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம், 2007-ன் 23(1)வது பிரிவு வயதான பெற்றோர்களை பாதுகாக்கவே உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் பெற்றோர்கள் தங்களின் சொத்தை கொடையாகவோ அல்லது கொடைச்சீட்டு (Settlement Deed) மூலமாகவோ மாற்றினால், அதை பெறுபவர்கள் அவர்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பாதுகாக்கிறது.
கொடைச்சீட்டை ரத்து செய்யலாம்
இதன் மூலம், பெற்றோர்களை தவிர்க்கப்பட்டோ, பராமரிக்கப்படாமலோ விட்டால், அவர்கள் அந்த சொத்து பரிமாற்றத்தை ரத்து செய்யலாம் .. சொத்தை பெறுபவர் தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், வயதானவர்கள் திரும்பப்பெறுதல் கோருவதற்கும், கொடைச்சீட்டை செல்லாததாக அறிவிக்க உரிமை உண்டு..
மூத்த குடிமக்களிடமிருந்து, குறிப்பாக அவர்களின் குழந்தைகள் அல்லது நெருங்கிய உறவினர்களுக்கு சொத்து பரிமாற்றங்கள் பெரும்பாலும் அன்பு மற்றும் பாசத்தால் தூண்டப்படுகின்றன என்பதை சட்டம் அங்கீகரிக்கிறது..
தள்ளுபடி செய்யப்பட்ட மனு
இந்த வழக்கை பொறுத்தவரை, வயதான பெண் தன்னுடைய புகாரிலும், ஆர்டிஓ முன்பும், தன்னுடைய மகனாலும், மருமகளாலும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டதாக திட்டவட்டமாக உறுதியாகியுள்ளது. எனவே, மாலாவின் மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.
ஆனால், சென்னை ஹைகோர்ட்டுக்கு, மருமகள் மாலா அப்பீலுக்கு போன போதே, அந்த பரிதாப நாகலட்சுமி இறந்துவிட்டார்...!!!
0 Comments