வேலூர்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் விஜய கார்த்திகேயன், வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிக்கும் அலுவராக இருக்கிறார். இவர் அதிகாரிகளுக்கு நேற்று முக்கியமான உத்தரவினை பிறப்பித்தார். அதன்படி, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு இடங்களில் கட்டப்பட்டுள்ள 2,394 வீடுகளுக்கு பட்டா வழங்கும் திட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம் என முடிவு செய்துள்ளது.இதற்கான பணிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.வேலூர் மாவட்டத்திலும் அதிகாரிகள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநருமான விஜய கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய விஜய கார்த்திகேயன் , புதிதாக தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களிலும் ஒரு மருந்தாளுநர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் மருந்தகம் திட்டமானது பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்கக்கூடிய திட்டம். இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அதேபோல் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் திட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது வேலூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு இடங்களில் கட்டப்பட்டுள்ள 2,394 வீடுகள் கள ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினார்கள். அரசு வழங்கும் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.
அதேபோல் கூட்டத்தில் அதிகாரிகளிடம், புதிய மினி பேருந்து வழித்தடங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகள், வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 36 பேருந்து வழித்தடங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அது குறித்த விவரங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளதாக கூறினார்கள். அப்போது விஜய் கார்த்திகேயன் ஐஏஎஸ் அந்த வழித்தடங்களில் குடியிருப்பு பகுதிகள் வழியாக பஸ் செல்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் தொடர்பாக விளக்கம் அளித்தார்.அதன்படி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க ரூ.9 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்தனர். இந்த கூட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
.jpg)
0 Comments