சென்னை: மார்ச் மாதம் முழுவதும் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து இருக்கும். அதன்படி நாளை (1-ந் தேதி), 8, 15, 22 மற்றும் 29 ஆகிய 5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக பதிவுத்துறை சார்பில் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் ஆவணப்பதிவிற்கு கூடுதல் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனம் போன்ற குழுவாகக் கூடி செயல்படும் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்திரப்பதிவு அலுவலகங்களை பொறுத்தவரை மாசி மாதத்தில் அதிகப்படியான பத்திரப்பதிவு நடைபெறும். அதேபோல் பங்குனி மாதத்திலும் பத்திரப்பதிவு அதிகமாக நடைபெறும்.. ஏனெனில் ஆண்டு கணக்கு முடியும் மாதம் என்பதால் பலரும் பத்திரப்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.. பொதுவாக பத்திரப்பதிவு செய்ய முன்பு போல் கடினமான நிலை இல்லை.. எளிதாக பத்திரப்பதிவு செய்துவிட முடியும். அதேபோல் முகூர்த்த நாட்கள் வரும் போது விடுமுறை நாட்கள் என்றாலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில், 100 சார் -பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட்டு வருகின்றன.. இந்நிலையில் மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பதிவுத்துறை சார்பில் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: மார்ச் மாதம் முழுவதும் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து இருக்கும். அதன்படி நாளை (1-ந் தேதி), 8, 15, 22 மற்றும் 29 ஆகிய 5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும். மார்ச் மாதம் என்பதால் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது கணக்குகளை நிறைவு செய்வார்கள்.
எனவே மார்ச் மாதம் முழுவதும் வரும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை ஆவணங்கள் பதிவு முடியும் வரை பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட உள்ளது. மேலும் விடுமுறை நாளில் ஆவணப்பதிவிற்கு கூடுதல் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
.jpg)
0 Comments