சென்னை: நீண்ட காலம் முன்பு முன்பு சிலர் வீட்டு மனையை வாங்கியிருப்பார்கள்.. அப்படி வாங்கி வைத்துள்ளவர்களின் வீட்டு மனையை.. இப்போது நீங்கள் வாங்கி பத்திரப்பதிவு செய்ய போகிறீர்கள் என்றால், நிச்சயம் இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். ஏனெனில் பழைய வீட்டு மனையில் சில சிக்கல்களும் இப்போது வருகிறது. அப்படி வரும் சிக்கல்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் என தமிழ்நாட்டின் எந்த நகர்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளும் மிகவேமாக வளருகின்றன. நகரத்தை ஒட்டியுள்ள பகுதிகளும் நகரமயமாகி வருவதால், நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால் நிலத்தின் மதிப்பும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக சொல்வது என்றால், மற்ற ஊர்களைவிடவும் சென்னை, கோவையை ஒட்டிள்ள பகுதிகளின் நிலத்தின் மதிப்பு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. இன்னும் உயரப்போகிறது. பலரும் வீட்டுமனை வாங்கி வீடு கட்டி குடியேற வேண்டும் என்று கனவில் உள்ளார்கள். அப்படி வீடு கட்ட இடம் வாங்க போகிறார்கள் என்றால் கண்டிப்பாக சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.. முதல் விஷயம்.. பழைய வீட்டு மனை வாங்க போகிறீர்கள் என்றால், அதில் வில்லங்கம் உள்ளதா என்பதை ஈஸி போட்டு பார்த்துவிடுங்கள். ஈஸி போட்டு பார்த்து பிரச்சனை இல்லை என்றால், நிலத்தின் அளவு பட்டா மற்றும் பத்திரத்தில் ஒரே அளவு உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். அதேபோல் வாங்கியவர் பெயரில் பட்டா இருக்கிறதா என்பதை உறுதி செய்து வாங்குங்கள்.. அடுத்தாக பட்டா இல்லை என்றால், நீங்கள் தான் பட்டா வாங்க வேண்டும் என்றால், பத்திரத்தில் உள்ள அளவின்படி பட்டா வழங்குவார்களா என்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் பக்கத்து நிலத்திற்கு சில சமயங்களில் நிலத்தின் அளவினை கூட வைத்து பட்டா கொடுத்துவிடுவார்கள்
அப்படி கொடுத்துவிட்டால் இந்த நிலத்திற்கு பத்திர அளவுப்படி பட்டா தர இயலாது. அதனை மாற்றுவதற்காக நீங்கள் வருவாய்துறை ஆபிஸில் அலைய வேண்டியதிருக்கும். அதேபோல் இன்னொரு முக்கியமான விஷயம் என்றால், நிலத்தின் வகை என்னவென்று பாருங்கள்.. பஞ்சமி நிலமா, ஆதிதிராவிடர்களுக்கு தரப்பட்ட நிலமா அல்லது குடிசை மாற்று வாரிய நிலமா, கள்ளர் ஜாதி நிலமா அல்லது அரசு எந்த சமுதாயத்திற்காகவாவது வழங்கிய நிலமா என்பதை விஏஓ ஆபிஸில் சென்று நிலத்தின் ஆவணங்களை பாருங்கள். அப்படிப்பட்ட நிலங்களுக்கு வேறு சமுதாயத்தினர் வாங்கினால் பட்டா வாங்கவே இயலாது என்கிறார்கள். அதேபோல் கோவில் நிலமா அல்லது நீர் நிலை ஆக்கிரமித்து அந்த நிலம் உள்ளதா, என்பதை அறியுங்கள். இப்போது அரசு நிலங்களுக்கு மதிப்பு பூஜியம் என்று உள்ளதால் , அந்த வரிசையில் உங்கள் சர்வே எண் வருகிறதா என்பதை உறுதி செய்யுங்கள். அப்படி உறுதி செய்தால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். பாதி பட்டா பாதி நீர்நிலை ஆக்கிரமிப்பு உள்ளது என்றாலும் அதுபோன்ற வீடு அல்லது நிலத்தை வாங்குவதை தவிருங்கள். இல்லாவிட்டால் நாளைக்கு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வருவார்கள்.
அதேபோல் அங்கீகாரமற்ற வீட்டுமனை என்றாலும் வாங்க வேண்டாம். அதற்கு அங்கீகாரம் இருக்கிறது என்பதை உறுதி செய்து வாங்குங்கள். இதேபோல் சிலர் கூட்டு பட்டா நிலத்தில் இடம் வாங்கியிருப்பார்கள். அதில் பட்டா இருந்தால் மட்டுமே கூட்டுபட்டா நிலங்களை வாங்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் தான் வரும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் நிபுணர்கள். அதேநேரம் நிலம் பற்றி உங்களுக்கு தெரியாது என்றால், வழக்கறிஞர்களை வைத்து நில ஆவணங்களை கொடுத்து பிரச்சனைகளை கேளுங்கள். அவர்கள் பிரச்சனை இல்லை என்று சொன்னால் வாங்கலாம்.
0 Comments