சென்னை : தங்க நகைகளை அடகு வைப்பது என்பது நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளது. அவசரத்திற்கு தங்க நகைகளை அடகு வைத்துதான் வாழ்கிறார்கள். மருத்துவம், கல்யாணம், புது வீடு கட்ட, கட்டிய வீட்டை புதுப்பிக்க, நிலம் வாங்க, பள்ளியில் குழந்தைகளுக்கு பீஸ் கட்டுவதற்கு என முதலில் யோசிப்பது தங்க நகைகளை அடகு வைக்க தான். தங்க நகை அடகு வைக்கும் போது இந்த தவறுகளை மறந்தும் செய்துடாதீங்க.
தங்க நகைகளை அடகு வைக்காமல் வாழ்பவர்களை நடுத்தர மற்றும் ஏழைக்குடும்பங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மிக வசதியானவர்கள் அல்லது தங்க நகையே இல்லாதவர்கள் மட்டும் நகைகளை அடகு வைத்திருக்க மாட்டார்கள்.. மற்ற அனைவருமே எல்லா தேவைகளுக்கும் தங்க நகைகளை தினசரி அடகு வைக்கிறார்கள்.. தங்க நகைகளை அடகு வைக்க போகும் முன்பு கவனிக்க வேண்டியவற்றை பார்ப்போம்.
தங்க நகைக்கு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், நம்முடைய தங்க நகையின் தரத்தின் அடிப்படையில் பணத்தை கடனாக தருகிறார்கள். 916 நகைக்கு தங்க நகையில் அதிக கடன் தரப்படுகிறது. 916 இல்லாத நகைகள் என்றால் ஓரளவு கடன் தருவார்கள்.. உதாரணத்திற்கு பொதுத்துறை வங்கிகளில் கிராமுக்கு தற்போது 5000 ரூபாய்க்கு மேல் தரப்படுகிறது. ஒரு பவுன் 916 தங்க நகைக்கு 40000 முதல் 450000 வரை இன்றைக்கு கடன் தரப்படுகிறது. நகையின் அன்றைய விலையில் 75 சதவீதம் வரை கடன் தரப்படுகிறது. நகைகளை பொறுத்தவரை பொதுத்துறை வங்கிகளில் 12 மாதம் அடிப்படையில் கடன் தருவார்கள். ஓராண்டு முடிவதற்குள் திருப்ப வேண்டும். அப்படி திருப்ப முடியவில்லை என்றால், அதற்கு மாதம் மாதம் வட்டி கட்டினால் பிரச்சனை இருக்காது. இல்லை என்றால் மொத்தமாக ஓராண்டுக்கு வட்டியை கட்ட வேண்டியதிருக்கும் அல்லது அசல் தொகையுடன் வட்டிப்பணமும் அசலாக மாறிவிடும். அந்த பணத்திற்கு அடுத்த வருடம் வட்டி போடுவார்கள்.
உதாரணத்திற்கு ஒருவர் நான்கு பவுன் தங்கத்தை ஒன்றரை லட்சத்திற்கு அடகு வைக்கிறார் என்றால், அதற்கு வட்டி மட்டும் ஓராண்டிற்கு சுமார் 14000 வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த பணமும் அடுத்த ஆண்டில் அசல் பணத்துடன் சேர்ந்துவிடும். அடுத்த ஆண்டில் 1.50 லட்சம் என்பது 1.64 லட்சம் கடனமாக மாறிவிடும். எனவே வட்டியை மாதம் மாதம் கட்டிவிடுவது நல்லது. மாதம் மாதம் வட்டி கட்ட முடியாது என்றால் 3 மாதம் ஒரு முறை வட்டியை கட்டிவிடுங்கள்.
வட்டியுடன் அசலுக்கு தேவையான பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மாதம் மாதம் காட்டினால் மிகப்பெரிய அளவில் நகைக்கடன் குறைந்துவிடும். எளிதாக நகையை திருப்பிவிட முடியும். மாறாக ஆண்டு இறுதியில் சென்று வட்டியுடன் நகையை திருப்ப சென்றால், கட்ட முடியாத நிலை ஏற்படும். திருப்ப முடியாமல் மறு அடகு வைக்க வேண்டிய நிலை வரும். நகைக்கடன் வாங்கியவர்கள் கண்டிப்பாக ஆட்டோ ரெனிவல் ஆப்சன் போட வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் வங்கியில் உள்ள பணத்தை எடுத்து வட்டியை கழிக்க தொடங்கிவிடுவார்கள். அது உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. சரியாக ஓராண்டு முடிவதற்குள் வங்கியில் திருப்பி வைத்துவிடுங்கள்.. அதேபோல் நகைகயை அடகு வைக்க போகிறீர்கள் என்றால், முடிந்த வரை கனரா வங்கி, எஸ்பிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் வைக்கலாம்.. வட்டி குறைவாக இருக்கும். அரசு வங்கிகளில் வங்கி கணக்கு இல்லை என்றால் வங்கி கணக்கு தொடங்கி வையுங்கள். பணம் ஓரளவு தான் கிடைக்கும் என்றாலும், வட்டி குறைவாகவே இருக்கும். ஓராண்டிற்குள் எளிதாக திருப்பிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
ஆனால் தனியாரில் வைத்தால், மிக குறுகிய காலத்தில் திருப்ப வேண்டும்.. வட்டி மாதம் மாதம் கட்டாமல் விட்டால் வேகமாகவே நகையை இழக்க வேண்டிய நிலை கூட வந்துவிடும். வெறும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்தில் திருப்ப போகிறீர்கள்.. இன்னும் கைமாற்று போல் பணம் தேவை என்றால் தனியாரில் வைக்கலாம். அதேபோல் அதிக பணம் தேவை என்றாலும் தனியார் நகையை அடகு வைக்கலாம். ஆனால் அந்த பணத்தை உடனே கட்டிவிட முடியும் என்றால் மட்டுமே அப்படி வைக்க வேண்டும்.. இல்லாவிட்டால் சிக்கலில் சிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.. நகைக்கு வட்டி இத்தனை பைசா வட்டி என்பதை தாண்டி எத்தனை சதவீதம் வட்டி என்பதை தெளிவாக அறிந்து நகைகளை அடகு வையுங்கள். வரும் காலத்தில் நகையின் மதிப்பு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயரப்போகிறது. வெறும் 60000 கட்ட முடியாமல் 5 பவுன் தங்க நகைகளை பறிகொடுத்தவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இன்று ஒரு பவுன் தங்க நகையே 63000 க்கு மேல் போய்விட்டது என்பதை மறந்துவிடாதீர்கள்.
0 Comments