வேலூர்: போக்குவரத்துத் துறையில் அனைத்துப் பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் எளிதில் அறியும் வண்ணம் parivahan என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது. வரி செலுத்திய விவரம், காப்புச் சான்று, தகுதிச்சான்று, புகைச்சான்று ஆகியவற்றின் முடிவு தேதி என அனைத்து விவரங்களையும் கைப்பேசி மூலமே அறிய முடியும். எனவே வாகன பதிவில் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என்று வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பொதுமக்கள் எளிதாக வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெறவேண்டும் என்ற நோக்கில் parivahan என்ற இணையதளத்தையும் எம் பரிவாகன் என்ற ஆப்பையும் கொண்டிருக்கிறது.இதில் செல்போனை பதிவு செய்வதன் மூலம், வாகனத்தின் உரிமையாளர் பெயர், வாகனத்தை பதிவு செய்த தேதி, வாகனத்தை பதிவு செய்த அதிகாரி, வாகனத்தின் மேக் மற்றும் மாடல், வாகனத்தின் எரிபொருள் டைப், வாகன வயது, வாகன வகை, வாகத்தின் காப்பீட்டுச் சான்றிதழ் முடியும் காலம், தகுதிச் சான்றிதழ் முடியும் காலம் போன்றவிவரங்களை அறியலாம்.அதேபோல் உங்கள் லைசென்ஸ் மற்றும் வாகனம் தொடர்பான அனைத்து போக்குவரத்து விதிமீறல்களையும் அறிய முடியும். அனைத்திற்கும் செல்போன் எண்ணை பதிவு செய்வது அவசியம் ஆகும்.
இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "போக்குவரத்துத் துறையில் அனைத்துப் பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் எளிதில் அறியும் வண்ணம் parivahan என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்த கணினி அவசியம் என்பதை மாற்றி, செல்போன் மூலமே எல்லா வகையான பணிகளையும் மேற்கொள்வதற்கான எளிய வழிமுறைகள், மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டுள்ளன. செல்போன் அனைத்து மக்களிடமும் பயன்பாட்டில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் மக்கள் எந்த வகையான மோட்டார் வாகனங்கள் வைத்திருந்தாலும், அந்த வாகனத்தின் அடிப்படை விவரங்களை, அதாவது வரி செலுத்திய விவரம், காப்புச் சான்று, தகுதிச்சான்று, புகைச்சான்று ஆகியவற்றின் முடிவு தேதி என அனைத்து விவரங்களையும் கைப்பேசி மூலமே அறியலாம். இதுபோன்ற வசதிகளை பெற, வாகன உரிமையாளர்கள் தங்களது செல்போன் எண்ணை, அவர்கள் பெயரில் உள்ள வாகனப்பதிவில் இணைத்திட வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்டால் அந்த வாகனம் குறித்த பணிகள் நடைபெறும் பொழுது அவ்வப்போது குறுந்தகவல்கள் வரும்.
எனவே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் பதிவில் செல்போன் எண்ணை இணைக்க வாகன பதிவுச் சான்றின் நகல் மற்றும் வாகன உரிமையாளரின் செல்போன் எண் குறிப்பிடப்பட்டுள்ள முழு விவரம் கொண்ட ஆதார் அட்டையின் நகலினை, அலுவலக வேலை நாட்களில் அருகில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
0 Comments