சென்னை: தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நிலம் தொடர்பான மோசடிகளில் சிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காகவே தனியாக https://eservices.tn.gov.in/eservicesnew/ index.html என்ற இணையதளத்தை நடத்தி வருகிறது. இந்த இணையதளத்தில் பல்வேறு அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். அதில் இனி பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பெறுவதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த போகிறது
இந்தியாவில் மிகவேகமாக நகரமயமாகும் ஒரு மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் நகரங்களை ஒட்டியுள்ள அனைத்து பகுதிகளும் மிகவேகமாக நகரமயாகி வருகிறது. இதனால் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் கிராமங்களில் ரியல் எஸ்டேட் கொடிகட்டி பறக்கிறது
பலரும் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலம் வாங்கி வீடு கட்ட விரும்புகிறார்கள். இதனால் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், ஓசூர், திருநெல்வேலி உள்பட பல்வேறு நகரங்களில் நிலத்தின் மதிப்பு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. சென்னை நிலத்தின் மதிப்பு: குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிலத்தின் மதிப்பு கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. குறிப்பாக சாலையை ஒட்டியுள்ள பகுதிகள், ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு அதிகமாகி வருகிறது. ஆக்கிரமிப்பு: இதன் காரணமாக சிலர் நீர்நிலைகளை ஆக்கிரமித்து பத்திரப்பதிவு செய்துள்ளார்கள். சிலர் அரசு நிலங்களை ஆக்கிரமித்து பத்திரப்பதிவு செய்துள்ளார்கள். சிலர் பாதி அரசு நிலம், பாதி சொந்த நிலம் என்று ஆக்கிரமித்தும் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட இடங்களை வாங்கும் போது சிக்கல் வருகிறது. அதேபோல் வேறு ஒருவரின் நிலத்தை ஆதாரில் பெயர் மாற்றி, மோசடி செய்யும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கிறது
நில மோசடியை தடுக்க முயற்சி : இதன் காரணமாக தமிழக அரசு, பொதுமக்கள் நிலம் தொடர்பான மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் வாங்க விரும்பும் நில ஆவணங்களை எளிதாக பெறுவதற்கு https://eservices.tn.gov.in/eservicesnew/ index.html என்ற இணையதளம் மூலம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அரசின் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பொதுமக்கள் தங்களது வீடு, நிலம் மற்றும் அனைத்து சொத்துகளுக்கான பட்டா மற்றும் வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நில ஆவணங்கள் பதிவிறக்கம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஆனால் இப்போது செல்போன் எண் கொடுத்து அதில் வரும் ஓ.டி.பி. மூலம் தான் ஆவணங்களை பதிவிறக்கம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் ஒரு செல்போனுக்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 8 முறை மட்டுமே ஆவணங்களை பெற முடியும் என்ற நிபந்தனை விதித்துள்ளது. நில ஆவணங்கள் பெறும் விவகாரத்தில் மோசடி நடைபெறுவதை தடுக்க இந்த கட்டுப்பாடு அவசியம் என்று கருதும் தமிழக அரசு, இந்த கட்டுப்பாடுகளை நீக்க மறுத்து வருகிறது, பட்டா உடன் வரைபடம் : அதேநேரம் தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக புதிய நடைமுறையை இப்போது அறிமுகம் செய்ய போகிறது. தற்போதைய நடைமுறையின்படி, பட்டாவையும், அந்த நிலத்திற்கான வரைபடத்தையும் தனித்தனியாக தான் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. கொடுத்து பதிவிறக்கம் செய்ய முடிகிறது. ஆனால் இனிமேல், மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றுடன் சர்வே விவரங்களை கொடுத்துவிட்டாலே, பட்டாவுடன், அதன்கீழ் வரைபடமும் ஒரு சேர வந்துவிடும்
சோதனை வெற்றி : இந்த வசதி காரணமாக பொதுமக்கள் தங்களது நில ஆவண பட்டா மற்றும் வரைபடங்களை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சோதனை முயற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதனை பிரிண்ட் எடுப்பதில் சில இடையூறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அதனை மேம்படுத்திவிட்டு, விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டம் அமலுக்கு வரும் போது பொதுமக்கள் தங்களது சொத்திற்கான அளவு, வரைபடங்களை எளிதாக பெற முடியும். இந்த திட்டத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது
0 Comments