உதவித் தொகையை உயர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

 உதவித்தொகையை உயர்த்தக்கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டத்தை தொடர்ந்தனர்.



கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர். மாதாந்திர உதவித் தொகையை ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தக்கோரி முழக்கமிட்ட அவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குடியேறும் போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் தங்கவைத்தனர். பின்னர் அவர்களை விடுவித்தபோதும், கோரிக்கைகளை முன்வைத்து, திருமண மண்டபத்தின் வளாகத்தில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள், தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி முறையிட்டனர். இரவான பின்னும் போராட்டத்தைத் தொடர்ந்த அவர்கள், அங்கேயே சமைத்து சாப்பிட்டு, படுத்துறங்கினர்.

பழனியில் சாலையை மறித்து அமர்ந்த மாற்றுத்திறனாளிகள், இரவு பொழுதான பின்னரும் போராட்டத்தைக் கைவிடவில்லை. கொட்டும் பனியிலும் அந்த இடத்தை விட்டு அகலாமல் விடியவிடிய போராட்டத்தைத் தொடர்ந்தனர்.


தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்ட மாற்றுத்திறனாளிகள், சாலைமறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்ட பின்னர், விடியவிடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகங்களின் முன்பும் போராட்டங்கள் நடந்தன.

திண்டுக்கல்லில் தலைமை தபால் நிலையம் சாலையின் நடுவே மாற்றுத்திறனாளிகள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர். சாலையிலேயே அடுப்பு வைத்து சமைத்து சாப்பிட்டு உறங்கினர்.

Post a Comment

0 Comments