டாக்டர்.அம்பேத்கர் கலப்புத் திருமணத் திட்டம்:

  டாக்டர்.அம்பேத்கர் சமூக ஒருமைப்பாடு கலப்புத் திருமணத் திட்டம் என்ற பெயரில் சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு 2013 ஆம் ஆண்டில் இருந்து ஒருமுறை ஊக்கத் தொகையாக 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், இந்த ஊக்கத் தொகை சலுகை தாழ்த்தப்பட்டவரை தவிர மற்ற சாதி மறுப்பு திருமணத்திற்கு பொருந்தாது.  சாதி மறுப்பு திருமணம் புரிபவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை குறித்து மத்திய சமூகநல அமைச்சகம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய சமூகநல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

  1. சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறியது நீக்கப்படுகிறது. இனி ஊக்கத் தொகை பெற வருமான உச்சவரம்பு இல்லை.
  2. இத்திட்டத்திற்கு பயனாளிகளை மாநில அரசு பரிந்துரை செய்யும் என்னும் விதி நீக்கப்பட்டு, இனி முழுவிவரங்களையும் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நீதிபதி அங்கீகாரமளித்த பின் அம்பேத்கர் ஃபவுண்டேசன்க்கு பரிந்துரைக்கப்படும் என்று மாற்றப்பட்டுள்ளது.
  3. ஊக்கத் தொகையான 2.5 லட்சம் இரு தவணைகளாக வழங்கப்படும். இதில், 1.50 லட்சமானது அதிகாரியின் ஆணைக்கு பின் தம்பதிகளுக்கு வழங்கப்படும். மீதத் தொகை மூன்று வருடங்களுக்கு நிலையான வைப்புத் தொகையாக பிடிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

ஊக்கத் தொகைக்கான தகுதிகள்:

  • ஊக்கத் தொகையைப் பெறுவதற்கு மணமக்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேராதவராகவும் இருத்தல் அவசியம்.
  • திருமணமானது இந்து திருமணம் 1955-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • மறுமணத்திற்கு ஊக்கத் தொகை வழங்கப்படாது.
  • திருமணமாகிய ஒரு வருடத்திற்குள் விண்ணப்பத்திருக்க வேண்டும்.
  • மாநில அரசிடம் இருந்து உதவித் தொகை பெற்றவராக இருந்தால், அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

அம்பேத்கர் திட்டத்தின் இலக்கு :

பல்வேறு மாநிலங்களிலும் கூட இதுபோன்று செயல்படுத்தி வரும் திட்டங்களில் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை, ஆகையால் மத்திய அரசும் வருமான உச்சவரம்பை நீக்கியுள்ளது. இத்திட்டம் அனைவருக்கும் பயன்படும் வகையில்  இருந்தாலும் பெரிதளவில் செயல்படுத்த முடியவில்லை. ” குறிப்பாக, ஆண்டிற்கு 500 தம்பதிகள் பயன்பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தால், 2014-2015-ல் 5 தம்பதிகள் மட்டுமே  , 2015-2016-ம் ஆண்டில் விண்ணப்பித்த 522 படிவங்களில் 72 மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2016-2017-ல் 736 விண்ணப்பங்களில்  45 தம்பதிகள் மற்றும் தற்போது பெறப்பட்ட 409 விண்ணப்பங்களில் 74 தம்பதிகள் மட்டுமே தேர்வாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது “.

உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் என்று வரிசைப்படுத்தப்பட்ட  மாநிலங்களில் மட்டும் அதிகளவில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர். இந்தியாவிலேயே சாதி மறுப்பு திருமணங்களுக்கு அதிக ஊக்கத் தொகை வழங்கும் மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது. ராஜஸ்தான் மாநில அரசு ரூ.5 லட்சம் வரை ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.


2005-2006 ஆண்டில் “ நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே ” சார்பில் 43,102 தம்பதிகளிடம் எடுக்கப்பட்ட தகவலின்படி, இந்தியாவில் 100க்கு 11 தம்பதிகள் மட்டுமே சாதி மறுப்பு திருமணங்கள் செய்துள்ளனர்.

இவ்வாறு, வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சம் என்று கூறியதை, ஊக்கத் தொகையாக வழங்குகிறார்கள் என்ற தவறான செய்தியை பரப்பியுள்ளனர். அதிக எதிர்ப்புகளும், ஆணவக் கொலைகளும்  நிகழ்த்தப்படும் தமிழகத்தில் கூட அதிகளவில் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. Post a Comment

0 Comments