2019ஆம் ஆண்டு பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் என மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணம் நேரடியாகவே விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும்.
நிலம் இருக்கும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பணம் பெறத் தகுதியானவர்கள்.
தகுதியற்றவர்கள்
நிறுவனம் சார்ந்த நிலமுடையவர்கள், அரசமைப்பு பதவிகளில் இருக்கும் விவசாய குடும்பங்கள், அரசு மற்றும் அரசு துறை நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்றவர்களின் குடும்பங்கள், டாக்டர், இஞ்சினியர், வக்கீல் மற்றும் மாதம் ரூ.10,000 மேல் பென்சன் வாங்குவோர், வருமான வரி செலுத்தியோர் இத்திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது.
எத்தனை முறை பணம் வரும்?
ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் என மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படும்.
பணம் வரும் தேதி அறிவிப்பு
கிசான் கல்யாண் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி வாயிலாக விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிசம்பர் 25ஆம் தேதி பணம் அனுப்பப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பொங்கல் பரிசு
பிரதமரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தியாக வெளிவந்துள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் மாநில அரசு சார்பில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வருவது மற்றொரு பொங்கல் பரிசு என்றே கூறலாம்.
0 Comments