திடீர் மழையாலோ அல்லது எதிர்பாராத விதமாகவோ நமது முக்கிய ஆவணங்கள் உதாரணமாக பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ், சொத்து பத்திரங்கள் போன்றவை தண்ணீரில் நனைந்துவிட்டால், அதனை மீண்டும் எப்படி வாங்க முடியும் என்ற யோசனையிலேயே எல்லாவற்றையும் மறந்து விடுவோம்.
தண்ணீரில் நனைந்து காகிதங்கள் ஒட்டி கொள்ளுமோ? எழுத்துக்கள் அழிந்துவிடுமோ? அல்லது ஆவணமே கிழிந்துவிடுமோ என்ற பயம் அனைவரையும் தொற்றிக்கொள்ளும். ஆனால் பதற்றப்படாமல், சரியான வழிமுறைகளை பின்பற்றினால், நனைந்த ஆவணங்களை கூட எளிதாக பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் செய்ய வேண்டியவை
தண்ணீரில் நனைந்த ஆவணங்களை சரி செய்ய முதல் செய்ய வேண்டியவை அதில் உள்ள ஈரத்தை முடிந்தவரை உறிஞ்சி எடுப்பதாகும். சுத்தமான, கசங்காத டிஷ்யூ பேப்பர்களை எடுத்து, நனைந்த காகிதத்தின் மீது மெதுவாக ஒற்றி எடுக்கவும். டிஷ்யூவை காகிதத்தின் மீது வைத்து உருட்டவோ, தேய்க்கவோ கூடாது. ஈரம் அதிகம் இருந்தால், டிஷ்யூ நனைந்தவுடன் அதை மாற்றிவிட்டு, புதிய டிஷ்யூவை பயன்படுத்தவும். வீட்டில் டிஷ்யூ பேப்பர் இல்லாத பட்சத்தில், சுத்தமான மற்றும் மென்மையான மைக்ரோஃபைபர் அல்லது காட்டன் துண்டை பயன்படுத்தலாம். துண்டை வைத்து ஆவணத்தின் மீது மென்மையாக ஒற்றி எடுத்தால், ஈரம் கணிசமாக குறையும்.
பல ஆவணங்கள் ஒன்றாக நனைந்திருந்தால், அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றை மிக மிக கவனமாக பிரிக்க வேண்டும். அவசரமாக பிரிக்க முயன்றால் காகிதங்கள் கிழிந்துவிடும். பிரிக்க முடியாத நிலையில் இருந்தால், காகிதங்களுக்கு இடையில் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட் அல்லது மெழுகு காகிதத்தை வைத்து, பின்னர் மெதுவாக பிரிக்க முயற்சிக்கலாம்.
எப்படி உலர வைப்பது?
ஈரத்தை ஓரளவிற்கு உறிஞ்சிய பிறகு, ஆவணங்களை முழுமையாக உலர வைக்க வேண்டும். நனைந்த ஆவணங்களை காற்றில் உலர வைப்பதே எளிமையான மற்றும் பாதுகாப்பான முறையாகும். பேனின் கீழ், நனைந்த காகிதங்களை ஒரு துணியின் மீது தனித்தனியாக விரித்து வைத்து உலர விடலாம். நேரடியாக வெயிலில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அது காகிதத்தை உடைய செய்து, எழுத்துக்களை மங்க வைத்துவிடும். அயர்ன் பாக்ஸ் மூலமும் உலர வைக்க முடியும். ஆனால் அதற்கு அதிக கவனம் தேவை. நனைந்த ஆவணத்தின் மேலும், கீழும் சில டிஷ்யூ பேப்பர்களை வைத்து அயர்ன் பாக்ஸை மிதமான சூட்டில் டிஷ்யூ பேப்பர்களின் மீது வைத்து மெதுவாக ஒற்றி எடுக்க வேண்டும். இப்படி செய்வதால், மீதமுள்ள ஈரம் டிஷ்யூவால் உறிஞ்சப்பட்டு, காகிதம் சுருக்கங்கள் இன்றி உலர்ந்துவிடும்.
என்ன என்ன செய்ய கூடாது?
நனைந்த காகிதங்களை கையால் கசக்கவோ, பிழியவோ கூடாது. ஹேர் ட்ரையர் போன்ற வெப்ப கருவிகளை நேரடியாக பயன்படுத்தி உலர வைக்க முயற்சிக்க கூடாது. இது காகிதத்தை மேலும் சேதப்படுத்தும். காகிதங்கள் முழுமையாக உலரும் வரை, அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க வேண்டாம். வரும் முன் காப்பதே சிறந்தது என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் முக்கியமான ஆவணங்களை எப்போதும் ஜிப்-லாக் கவர்கள் அல்லது waterproof ஃபைல்களில் வைத்து பத்திரப்படுத்துவது நல்லது. அதன் மூலம் இதுபோன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் இருந்து உங்கள் விலைமதிப்பற்ற ஆவணங்களை காப்பாற்ற உதவும்.
0 Comments