'முதலமைச்சர் தாயுமானவர் திட்டம்' இனி இந்த நாள்களில் ரேஷன் வீட்டுக்கே வந்துவிடும் - யார் யாருக்கு?

Follow Us

'முதலமைச்சர் தாயுமானவர் திட்டம்' இனி இந்த நாள்களில் ரேஷன் வீட்டுக்கே வந்துவிடும் - யார் யாருக்கு?

 Tamil Nadu Government Ration Door Delivery Scheme: தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" (Muthalamaichar Thayumanavar Scheme) வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி (செவ்வாய்) அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடக்கி வைக்கிறார்.

                                                                        


Tamil Nadu Government: யார் யாருக்கு இந்த திட்டம்?


இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில், "அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamil Nadu Government: மொத்தம் இத்தனை லட்சம் பேர் பயனடைவார்கள்...!


மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 34 ஆயிரத்து 809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15 லட்சத்து 81 ஆயிரத்து 364 குடும்ப அட்டைகளில் உள்ள 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளர்களும்; 91 ஆயிரத்து 969 குடும்ப அட்டைகளில் உள்ள 1 லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்தினாளிகளும் என ஆக மொத்தம் 16 லட்சத்து 73 ஆயிரத்து 333 குடும்ப அட்டைகளில் உள்ள 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamil Nadu Government: இந்த நாள்கலில் மட்டும் டோர் டெலிவரி


மேலும், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடம் இருந்து பெறப்பட்டு, அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அந்த செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.


மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamil Nadu Government: ரூ.30.16 கோடி கூடுதல் செலவு


70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு கூடுதலாக ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் இருப்பினும், மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments