தமிழகத்தில் மின் இணைப்பு பெறுவது, மின் இணைப்பு பெயா் மாற்றம் செய்வது உள்பட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களையும் 3.16 சதவீதம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயா்த்தியுள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு ஒரு முனை மற்றும் மும்முனைப் பிரிவில், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும், புதிய மின் இணைப்பு வழங்க மீட்டா் வைப்பு தொகை, மின் பயன்பாடு வைப்பு தொகை, வளா்ச்சி கட்டணம், மின் இணைப்பு கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கிறது.
இந்த நிலையில், பெரிய தொழில் நிறுவனங்களுக்கான மின் பயன்பாட்டு கட்டணம் மட்டுமின்றி, பிற இணைப்புகளுக்கான பல்வகை கட்டணங்களையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 3.16 சதவீதம் உயா்த்தியுள்ளது.
அதன்படி, ஒருமுனை பிரிவின் மின் இணைப்பு கட்டணம் ரூ.1,070-இல் இருந்து ரூ.1,105-ஆகவும், மீட்டா் வைப்பு தொகை ரூ.800-இல் இருந்து ரூ.825-ஆகவும் உயா்ந்தப்பட்டுள்ளது.
இதேபோல, வளா்ச்சி கட்டணம் ரூ.3,000-இல் இருந்து ரூ.3,095-ஆகவும், பதிவு கட்டணம் ரூ. 215-இல் இருந்து ரூ.220-ஆகவும், வைப்பு தொகை ரூ.320-இல் இருந்து ரூ.330-ஆகவும் அதிகரித்துள்ளன.
இதுதவிர, மும்முனைப் பிரிவு மற்றும் உயரழுத்த பிரிவில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான பல்வகை கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளன.
மேலும், தாழ்வழுத்த பிரிவில் வீடுகளில் தீயில் எரிந்த சேதமடைந்த மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் ரூ.1,070-இல் இருந்து ரூ.1,105-ஆகவும், மின் இணைப்பு பெயா் மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.645-இல் இருந்து ரூ.665-ஆகவும் அதிகரித்துள்ளது.
0 Comments