தமிழக அரசு ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மிக எளிய முறையில் விண்ணப்பித்து NOC பெறும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பான அரசாணை சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசின் SimpleGov முயற்சியின் கீழ் பாஸ்போர்ட் பெறுவது, அதனை புதுப்பிப்பது ஆகிய செயல்முறைகள் எளிமைபடுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக அடையாள சான்றிதழ், என்.ஓ.சி எனப்படும் தடையில்லா சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973 விதி என் 24ஏ கீழ் அமலுக்கு வந்துள்ளன.
தடையில்லா சான்று (NOC) பெறுவதில் எளிமைப்படுத்தப்பட்டுள்ள விஷயங்கள்:
ஆவணங்கள் பெறுவதில் சிரமம்: விரிவான முறையில் ஆவணங்களை சேகரித்து சமர்பிப்பது சவாலான ஒன்றாக இருந்தது. இந்த ஆவணங்கள் ஒவ்வொன்றும் பெறுவதற்கான நடவடிக்கையில் ஒவ்வொரு படிநிலையிலும் தாமதமாகி வந்தது.
துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பிரச்சினைகள்: என்.ஓ.சி எனப்படும் தடையில்லா சான்று பெறுவதற்கு பல்வேறு துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு என்பது அவசியம். போதிய தகவல் பகிர்வு இல்லாதது, ஒத்துழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் சான்று பெறுவது கால தாமதம் ஆகிறது. மேலும் அதிகப்படியான ஆவணங்களை கையாளும் வகையில் தள்ளி விடுகிறது.
வாய்ப்புகள் தவறவிடுதல்: பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் சர்வதேச கருத்தரங்குகள், சர்வதேச அறிவு மையங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகளில் அதிக சிக்கல் இருப்பதாக சுட்டி காட்டப்பட்டு சர்வதேச வாய்ப்புகளை தவறவிட்டு விடுகின்றனர்.
ஏமாற்றத்தில் முடியும் தனிப்பட்ட பயணங்கள்: குடும்பமாக வெளிநாடு பயணிக்க திட்டமிடும் போது, அதில் ஒருவர் அரசு ஊழியராக இருந்துவிட்டால் சிக்கல் தான். ஏனெனில் போதிய அனுமதி, சான்று பெறுவதில் நிலவும் சிரமங்கள், கால தாமதம் ஆகியவை அந்த பயணங்களையே வேண்டாம் என்று சொல்லுமளவிற்கு ஆளாக்கி விடுகிறது.
இவ்வளவு சிரமங்கள், சிக்கல்களை இருப்பதை உணர்ந்து அரசு அமைத்த குழு 01.04.2025 அன்று விரிவாக ஆய்வு செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்த பரிந்துரை செய்தது.
அதன்படி, சாதாரண பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது Annexure N -ல் குறிப்பிட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் Annexure N ஃபார்மேட் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இதை பூர்த்தி செய்து புதிய பாஸ்போர்ட் பெற அல்லது புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறையின் நிர்வாக தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவற்றை IFHRMS மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
ஒருவேளை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மேலும் விவரங்கள் தேவைப்படும் சுழலில் ஏற்பட்டால், அவசர கால நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட துறை தலைமையே என்.ஓ.சி அல்லது அடையாள சான்றிதழ் அல்லது இரண்டையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
0 Comments