எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலம் அவகாசம் நீட்டிப்பு!

Follow Us

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலம் அவகாசம் நீட்டிப்பு!

 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

                                                                             


தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள், மேனேஜ்மெண்ட் இடங்கள் மற்றும் கே.கே.நகரில் உள்ள ESIC மருத்துவக் கல்லூரி இடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் நடத்தும் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகிறது.

எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,000 மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதில் 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. அவை இல்லாமல் சுமார் 4,300 இடங்கள் உள்ளன. மேலும், 22-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 4,000 இடங்கள் உள்ளன.

மொத்தம் இந்தாண்டு 9,200க்கு மேற்பட்ட எம்.பி.பி.எஸ் இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் 50% இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படும். கூடுதலாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 500 இடங்கள் வரை உள்ளன.

அதே போன்று, பல் மருத்துவப் படிப்பிற்கு (பி.டி.எஸ்) 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்கள் உள்ளன. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1,900 இடங்கள் வரை உள்ளன. அகில இந்திய கோட்டாவிற்கு 37 இடங்கள், 7.5% இட ஒதுக்கீட்டிற்கு 126 இடங்கள் உள்ளன. என மொத்தம் 2025-26 கல்வி ஆண்டில் சுமார் 11,850 மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகிறது.

அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து கல்லுரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இந்தாண்டு ஜூன் 6 தேதி தொடங்கிவிட்டது. கடந்த 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் ஜூன் 25-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்று ஆராய்ச்சி இயக்குநரகம் இன்று (ஜூன் 25) அறிவிப்பு வெளியிட்டது.

அதில், "2025-2026 கல்வியாண்டிற்கான MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 25.06.2025 அன்று நீட்டிக்கப்படுவதாகவும், இப்போது விண்ணப்பங்களை 29.06.2025 மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.


Post a Comment

0 Comments