பொறியியல், இயற்பியல், வேதியியல், பயோ மெடிக்கல், உளவியல் பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்க.
செம அருமையான வேலை வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) விஞ்ஞானி- பி (Scientist B) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்காங்க. தேசிய அளவில் 155 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தங்களின் தகுதிக்கேற்ற பணிக்கு விண்ணப்பித்து பலன் பெறுங்க.
மத்திய பாதுகாப்பு துறை கீழ் இயங்கும் DRDO மற்றும் இதர நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானி - பி பதவிக்கான ஆட்கள் சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பொறியியல், வேதியியல், இயற்பியல், உளவியல் உள்ளிட்ட பாடங்களை படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கொண்டு ஆன்லைன் வழியாக https://rac.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), விமான மேம்பாட்டு நிறுவனம் (ADA),டெல்லியில் உள்ள ஆயுதங்கள் & மின்னணுவியல் அமைப்பு பொறியியல் நிறுவனம் (WESEE), புனே-வில் உள்ள ராணுவ பொறியியல் கல்லூரி, புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி, ஜலந்தர், போபால் மற்றும் பெங்களூரில் உள்ள தேர்வு மையம் ஆகியவற்றில் காலியாக உள்ள விஞ்ஞானி-பி பதவிக்கான பணியிடங்கள் DRDO-விலி ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீடு மையம் (RAC) நிரப்பப்படுகிறது.
எலெக்ட்ரானிக்ஸ் & தொடர்பியல் பொறியியல் -41, மெக்கானிக்கல் பொறியியல் -35, கணினி அறிவியல் & பொறியியல் -34, எலெக்ட்ரிக்கல் பொறியியல்- 7, மெட்டீரியல்/ மெட்டீரியல் அறிவியல் பொறியியல்/ உலோகவியல் பொறியியல் (Material/Material Science/ Metallurgical)- 5, இயற்பியல் 4, வேதியியல்-3, வேதி பொறியியல் (Chemical Engg)- 3, ஏரோனாட்டிக்ஸ்/ ஏரோஸ்பேஸ் பொறியியல்-6, கணிதம்-4, சிவில் பொறியியல்-1, பயோ- மெடிக்கல் பொறியியல்- 2, பூச்சியியல் (Entomology)- 1, பயோ வணிகவியல் (Bio Statistics)- 1, மருத்துவ உளவியல் (Clinical Psychology)-1, உளவியல் (Psychology)- 7 என்று மொத்தம் 155 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினர் 38 வரையும், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் 40 வயது வரையும் இருக்கலாம். மத்திய அரசின் விதிமுறைகளின் படி மாற்றுத்திறனாளிகள் அதிகபடியாக 10 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.
பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு அந்தந்த பொறியியல் பிரிவுகளில் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் முதல் வகுப்பு தகுதியுடன் முடித்திருக்க வேண்டும். அந்தந்த பாடங்களுக்கான கேட் தேர்வில் பங்குபெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிகளுக்கு தொடர்புடைய படிப்புகள் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், கணிதம், பூச்சியியல், பயோ வணிகவியல், மருத்துவ உளவியல், உளவியல் ஆகிய பதவிகளுக்கு அந்தந்த பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் கேட் தேர்வை எழுதி இருக்க வேண்டும்.
DRDO மூலம் தேர்வு செய்யப்படும் விஞ்ஞானி-பி பதவிகளுக்கு மத்திய அரசின் 7வது ஊதிய குழுவின் அடிப்படையில் நிலை -10 கீழ் அடிப்படை சம்பளம் ரூ.56,100 ஆகும். இதனுடன் கொடுப்பனை, அகவிலைப்படி ஆகியவை சேர்த்து தோராயமாக ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
விஞ்ஞானி-பி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கேட் தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு இடஒதுக்கீடு முறையில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும். இப்பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் https://rac.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. வரும் ஜூலை 4-ம் தேதி கடைசி நாள். அதுவரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். நேர்காணல் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
0 Comments